ஹூஸ்டன் இந்தியத் தூதரக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் 
தமிழகம்

ஹூஸ்டன் பல்கலை. 'தமிழ் ஆய்வு இருக்கை' - 10,000 அமெரிக்க டாலர் வழங்குவதாக ஓபிஎஸ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் 'தமிழ் ஆய்வு இருக்கை' அமைப்பதற்கு 10,000 அமெரிக்க டாலர் வழங்குவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் 'சர்வதேச வளரும் நட்சத்திரம் - ஆசியா’, 'தங்கத் தமிழ் மகன்', 'உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது-2019’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், அமெரிக்க வாழ் தமிழர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற துணை முதல்வர், அமெரிக்கர்களையும், அமெரிக்க வாழ் தமிழர்களையும் தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். மேலும், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (நவ.15) ஹூஸ்டன் இந்திய தூதரக அலுவலகத்தில், ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கை இயக்குநர்கள் குழுவைச் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் 'தமிழ் ஆய்வு இருக்கை' அமைப்பதற்கு தனது சொந்தப் பங்காக 10,000 அமெரிக்க டாலர் வழங்குவதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT