மலக்குழி உயிரிழப்பு, சமீபத்தில் செப்டிக் டாங்கில் அருண்குமார் உயிரிழப்பு போன்ற பல நிகழ்வுகள் நடக்கின்றன. இதற்காக உள்ள சட்டம் என்ன? என்பது குறித்தும் அதற்காகப் போராடுவோர் சொல்வது குறித்தும் ஒரு பதிவு.
கடந்த 12-ம் தேதி ராயப்பேட்டை வணிக வளாகத்தில் கழிவுநீர்த் தொட்டி (செப்டிக் டேங்க்) சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் அருண்குமார் (21) விஷவாயு தாக்கி உயிரிழந்தார். இதுபோன்ற நேரங்களில் மட்டும் பரபரப்பாக உயிரிழப்பு குறித்து பேசப்படுகிறது. பின்னர் இதுபோன்ற மரணங்கள் மறக்கப்படுகின்றன.
நடைமுறையில் துப்புரவாளர்களுக்கான உயர்ந்த அதிகாரமுள்ள தேசிய துப்புரவாளர் ஆணையம் இருப்பதும், துப்புரவாளர் மறுவாழ்வுக்காக 2013 சட்டம் நடைமுறையில் உள்ளதும் துப்புரவாளர் பணியில் உள்ளவர்கள் மட்டுமல்ல பொதுமக்களே அறியாத ஒன்றாக உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.சிவாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
மலக்குழி உயிரிழப்பு, சமீபத்தில் செப்டிக் டேங்க்கில் அருண்குமார் உயிரிழப்பு போன்ற பல நிகழ்வுகள் நடக்கின்றன, இதற்காக உள்ள சட்டம் என்ன?
1993-ல் முதல் சட்டம் வந்தது. புறக்கழிப்பறை மற்றும் தண்ணீர் இல்லாத கழிப்பறை பயன்பாட்டைத் தடை செய்யும் மத்திய அரசின் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தில் பெரிதாக ஒரு மாற்றமும் இல்லை. துப்புரவுப் பணியாளர்கள் பாதுகாப்பு, பணியில் இறப்பவர்களுக்கான இழப்பீடு, குற்றமிழைத்தவர்களுக்கான தண்டனை, துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வு குறித்த எந்த வழிகாட்டுதலும் சட்டத்தில் இல்லை.
பின்னர் பலகட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டதன் விளைவாக 20 ஆண்டுகள் கழித்து 2013-ல் திருத்தப்பட்ட சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளக்கூடாது. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவேண்டும். அந்தப் பணியிலிருந்து அவர்களை வேறு பணிக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட சட்டமாக அது இருந்தது. அதுதான் தற்போது அமலில் உள்ளது.
துப்புரவாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மறுவாழ்வுக்கான பணிகள் நடக்கிறதா?
தற்போது துப்புரவாளர் பணியில் ஈடுபடுவோர் குறித்த எண்ணிக்கையில்கூட சரியான நடைமுறை இல்லை. 2011 அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுமார் 7 லட்சம் பேர் இதுபோன்ற தொழிலில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால் அது சரியான கணக்கு அல்ல. சுமார் 15 லட்சம் பேர் வரை நாடு முழுவதும் இருக்க வாய்ப்புள்ளது என்பதுதான் எங்கள் அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அப்படியே மத்திய அரசின் கணக்குப்படி 7 லட்சம்பேர் என்று வைத்துக்கொண்டாலும், 2013-ம் ஆண்டு சட்டப்படி அவர்கள் மறுவாழ்வு, வேலை வாய்ப்புக்கு என்ன வழி செய்யப்பட்டது என்று கேட்டால் எந்தத் தகவலும் இல்லை. எதுவும் செய்யவில்லை என்றுதான் கூறவேண்டும்.
இந்தச்சட்டம் வந்த பின்னர் நாடு முழுவதும் எவ்வளவு பேர் மறுவாழ்வு அளிக்கும் வகையில் வேறு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர், வேறு என்ன வகையான தொழில் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறித்த எந்தத் தகவலும் மத்திய அரசும், மாநில அரசும் அளிக்கவில்லை.
தமிழ்நாட்டின் நிலை என்ன?
தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு இதுபோன்ற உயிரிழப்பு குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் 2013-ம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்தியது சம்பந்தமாக பதிலளிக்க உத்தரவிட்டது. ஆனால் என்ன தகவலை அளித்தார்கள் என்பது கேள்விக்குறிதான். இந்தியா முழுவதும் இதுபோன்ற மலம் அள்ளும் பணி, செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்போது உயிரிழப்புகள் நடக்கின்றன. தமிழகத்தில் அதிக அளவில் உள்ளதாக ஆய்வு சொல்கிறது.
இதுபோன்ற உயிரிழப்புகளில் சட்டம் சரியாக அமல்படுத்தப்படுகிறதா?
அமல்படுத்தப்படவேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது? கழிவு அகற்றும்போது ஏற்படும் இறப்பு குறித்த சட்ட நடவடிக்கையின்போது 2013 சட்டத்தை அமல்படுத்துவதோ, எஸ்சி/எஸ்டி சட்டத்தை அமல்படுத்துவதோ இல்லை. சாதாரணமாக சந்தேக மரணம் பிரிவு 174 மற்றும் கொலை அல்லாது உயிரிழப்பை ஏற்படுத்தும் 304 (1) பிரிவின் கீழ்தான் வழக்குப் பதிவு செய்கின்றனர்.
இந்த ஆண்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் 2013-ம் ஆண்டு சட்டத்தின் கீழும், வன்கொடுமைச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. சாதாரணமான சட்டத்தைப் பயன்படுத்தி அந்த மக்களுக்கு உரிய நியாயம் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது.
எஸ்சி/எஸ்டி சட்டம் ஏன் இதில் வருகிறது என்றால் அதிக அளவில் துப்புரவுப் பணியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள்தான் உள்ளனர். இவற்றின் கீழ் மறுக்கப்படுவதற்குக் காரணம் இறப்பு எண்ணிக்கையை குறைத்துக் காண்பிக்கவே. சர்வேயிலும் ஒழுங்காகப் பதிவு செய்யப்படுவதில்லை.
மனிதர்களை மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்துவது குறைந்து வருகிறது என்கிறார்களே?
இன்று நகரமயமாக்களில் அதிக அளவில் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் 90 சதவீதம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள்தான் ஈடுபடுகின்றனர். நகரத்தில் ஏகப்பட்ட கட்டிடங்கள், குடியிருப்புகள், ஷாப்பிங்மால்கள் வந்துவிட்டன. விரிவாக்கப்படும் நகரமயமாக்களில் அதிகம் செப்டிக் டேங்க்குகள்தான் உள்ளன. அதிக அளவில் பள்ளி, கல்லூரிகளில் துப்புரவுப் பணிகளில் இவர்கள்தான் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்படும் தற்காலிக கழிப்பறைகள் துப்புரவுப் பணியாளர்களால் மனித உழைப்பு மூலமாக மட்டுமே அகற்றப்படுகிறது. கோயில் திருவிழாக்கள், விவிஐபிக்கள், விஐபிக்கள் கலந்துகொள்ளும் பிரம்மாண்டக் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளில் அமைக்கப்படும் தற்காலிக கழிப்பறைகள் மற்றும் அந்த இடத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லையே. மனிதர்கள்தான் பயன்படுத்தப்படுகின்றனர்.
காஞ்சிபுரத்தில் சமீபத்தில் நடந்த அத்திவரதர் நிகழ்வு போன்ற மிகப்பெரிய லட்சக்கணக்கான மக்கள் கூடிய இடத்தில் தினந்தோறும் கழிவுகளை நூற்றுக்கணக்கான துப்புரவு ஊழியர்கள்தான் தினந்தோறும் அகற்றினர். இது சமீபத்திய நிகழ்வு.
ஆகவே வளர்ந்துவரும் நாகரிக சூழலிலும் மனித உழைப்பே அதிகம் உள்ளது என்பதே உண்மை. முழுக்க முழுக்க மனிதர்கள் பயன்பாடு இன்றும் உள்ளது. இதை ஒழிக்கவேண்டும் என்றால் 2013 சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவேண்டும்.
2019-ல் நடந்த 20 இறப்புகளில் 20 வழக்குகளிலும் 2013 தடைச்சட்டத்தின் கீழ், வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. போராட்டம் நடந்த சில இடங்களில் மட்டுமே போடப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் விபத்துப் பிரிவின் கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு இந்த விஷயத்தில் என்ன செய்யவேண்டும்?
முதலில் அந்த மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த வேலையைத்தான் செய்வோம் என்று அவர்கள் செய்யவில்லை. அவர்களுக்கான கவுன்சிலிங் கொடுத்து நிதியுதவி, மறுவேலை வாய்ப்பு அளிக்கவேண்டும். மெல்ல மெல்ல மனிதர்களை இப்பணியில் இருந்து அகற்றப்படவேண்டும் என்கிற சட்டத்தின் அம்சம் நடைமுறைக்கு வரவேண்டும்.
மனிதர்களை மலக்குழிக்குள் இறக்குவது, செப்டிக் டேங்க்கில் இறக்குவது தவிர்க்கப்பட ஏண்டும். மலம் அள்ளும் பணிகளில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவேண்டும். கேரள அரசு ரோபோக்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தும் முறையை அமல்படுத்தியுள்ளது. வெளிநாட்டுக்குச் சென்ற முதல்வர் மாடு வளர்ப்பது குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்துகிறார். ஏன் துப்புரவுப் பணிகளில் என்ன வகையான தொழில்நுட்பங்கள் வெளிநாடுகளில் உள்ளது என்று ஆய்வு நடத்தக்கூடாது? அதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி அதில் எந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
மாற்றம் வர என்ன செய்யவேண்டும்?
தற்போது நகரமயமாக்கல் அதிகரித்து வருகிறது. புதிய புதிய கட்டிடங்கள் எழுப்பப்படுகின்றன. குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. மக்கள் அதிகம் குடியேறுகின்றனர். பல ஐடி நிறுவனங்கள் பெருகி வருகின்றன. இதனால் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்கள், கழிவுகளை அகற்றும் தேவை அதிகரிக்கிறது. இவற்றைக் கண்காணிக்க மாவட்டந்தோறும் அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
நகரமயமாக்கல் உள்ள பயன்பாடு அதிகம் உள்ள தனியார் கட்டிடங்கள், குடியிருப்புகள், ஐடி நிறுவனங்கள் இங்கெல்லாம் துப்புரவுப் பணிகள், கழிவுகளை அகற்றுவது குறித்த பாதுகாப்பு அம்சங்கள் என்ன, தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் குறைந்த ஊதியத்தில் துப்புரவுப் பணியாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்றால் அவர்கள் குறித்த கணக்கெடுப்பு, அவர்களுக்கான உரிமைகள் குறித்து அந்தக் குழுக்கள் கண்காணிக்க வேண்டும். அந்தக் குழுக்களின் பணி இவற்றை மட்டும் ஆராயாமல் 2013-ம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்தும் வேலையிலும் கவனம் செலுத்தும் ஒரு அதிகாரம்மிக்க அமைப்பாக அந்தக் குழு இயங்க வேண்டும்.
இருக்கும் கட்டிடங்கள், புதிய கட்டிடங்களில் கழிவை அகற்றுவதற்கான பாதுகாப்பு அம்சங்கள் சரியாக அமல்படுத்தப்படுகிறதா? புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களில் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே அனுமதி என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தீயணைப்புத் துறை மட்டுமல்ல நான் சொன்ன இந்தக் குழுவும் இதைக் கண்காணிக்கும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதே இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்கும்.
2013 மலம் அள்ளும் தொழிலில் மனித உழைப்பை தடை செய்யும் மற்றும் மறுவாழ்வுச் சட்டத்தின் விதிகள் என்ன சொல்கிறது?
2013-ம் ஆண்டு துப்புரவாளர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் குடும்பத்திற்கு ஒரு முறை உதவித்தொகையாக ரூ.40,000 உடனடியாக வங்கிக் கணக்கில் போடவேண்டும். அவர்கள் வாழ்வை மேம்படுத்தும் தொகையாக அது அழைக்கப்பட வேண்டும். அவர்கள் குழந்தைக்கான கல்விக்கான உதவித்தொகை அளிக்கப்பட வேண்டும், அவர்கள் வேறு தொழிலில் ஈடுபடுத்தப்பட அதற்கான நிதி உதவி, தொழில் பயிற்றுநர்கள் உதவி, மாற்று வேலைவாய்ப்புக்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்பது விதி.
விபத்தில் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படவேண்டும், அவர் மனைவி அல்லது வாரிசுதாரருக்கு உரிய வேலை வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்றும் விதி உள்ளது.
இவ்வாறு எஸ்.கே.சிவா தெரிவித்தார்.
| மலக்குழி மரணங்கள் ஒரு தகவல்: இந்தியாவில் மலக்குழி மரணங்களில் முன்னணியில் இருக்கும் மாநிலம் தமிழகம் என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். அதில் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் 144 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு அடுத்து உள்ள உத்தரப்பிரதேசத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். நாடெங்கும் கழிவுகளை அகற்றும்பொழுது, செப்டிக் டேங்க்கில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1993 வரை 620 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. டிசம்பர் -31 2018 வரை உயிரிழப்புகள் குறித்து மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில், 2013 முதல் 2018 வரை அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 144 பேர் உயிரிழந்ததாகவும், அதில் 141 குடும்பங்களுக்கு முழு இழப்பீடு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். |