தமிழகம்

சேலம், திருவாரூர், தி.மலை, புதுக்கோட்டையில் சிட்கோ தொழிற்பேட்டைகள்: ரூ.30 கோடியில் அமைக்கப்படுகிறது

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை, சேலம், திருவாரூர் மற்றும் புதுக் கோட்டை மாவட்டங்களில் ரூ.30 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அமைச்சர் ப.மோகன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசும்போது அமைச்சர் வெளி யிட்ட அறிவிப்புகள்:

சிட்கோ சார்பில் திரு வண்ணாமலை, சேலம், திருவாரூர் மற்றும் புதுக் கோட்டை மாவட்டங்களில் 165 ஏக்கர் பரப்பில் ரூ.30 கோடியில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். குறைந்தபட்சம் 100 ஏக்கர் பரப்பில் தனியாகவோ, கூட்டு முயற்சியாகவோ தனியார் தொழிற்பேட்டைகள் அமைக்க தொழில்முனைவோர் முன்வந்தால், சிட்கோ நிறுவனம் இணைந்து அதை உருவாக்கும். சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வசதிக்காக சென்னை கிண்டியில் மாநில தொழில் மையம் அமைக்கப்படும்.

தொழில் முனைவோர் சுலப மாக தொழில் புரிய, ஒருங் கிணைந்த கணினி தொழில் நுட்ப வசதி ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியின் நெய்வேலி, சேப் பாக்கம், எழும்பூர் கிளைகளில் தானியங்கி பணப்பட்டு வாடா இயந்திரம் (ஏடிஎம்) நிறுவப்படும்.

டான்சியின் தொழிற்கூடங் கள், ரூ.1.25 கோடியில் கணினிமயமாக்கப்படும். 17 மாவட்டங்களில் சிட்கோ கிளை அலுவலகங்கள் அமைக் கப்படும். கடலூர் பதுமை உற்பத்தியாளர்கள் குடிசைத் தொழில் கூட்டுறவு சங்கத்தில் ரூ.10 லட்சத்தில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

இணையதள வசதி

அமைப்பு சாரா தொழி லாளர்கள் பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்தவும், நலத்திட்ட உதவிகளை விரைவாக பெறவும், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்துக்கு பெறப்படும் பங்களிப்புத் தொகையை நேரடியாக செலுத்தவும் இணைய தள வசதி உருவாக்கப்படும். தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் வசதிக்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் பன்மொழி உதவி மையம் ஏற்படுத்தப்படும்.

கன்னியாகுமரி, வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக தொழிலாளர் அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும். எடையளவு மற்றும் பொட்டலப் பொருட்கள் தொடர்பாக நுகர்வோர் குறை களை களைய கைபேசி பயன்பாட்டு வசதி இந்தியா வில் முதல்முறையாக ஏற் படுத்தப்படும். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் கோவையில் கூடுத லாக தொழிலாளர் நீதிமன்றம் ஏற்படுத்தப்படும்.

வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் 9 புதிய தொழிற்பிரிவுகள், 8 அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களில் ரூ.4.93 கோடியில் தொடங்கப்படும். தொழிற்பயிற்சி நிலையங்களில் இருந்து தேர்ச்சி பெற்றவர்களின் சான் றிதழ் உண்மைத் தன்மையை இணையதளம் மூலம் சரி பார்க்கும் திட்டம் ரூ.40 லட்சம் செலவில் அறிமுகப் படுத்தப்படும்.

பட்டு வளர்ச்சி

பட்டு வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள 100 இளநிலை ஆய்வாளர்கள், 29 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும். காட்டேஜ் பேசின் வகை தனியார் பட்டுநூற்பு நிலையங்களில் 5 பிரிவுகள் பலமுனை பட்டு நூற்பு நிலையங்களாக தரம் உயர்த்தப்படும். பட்டுப்புழு வளர்ப்புக்கு பயிர் காப்பீடு வழங்கப்படும். வெண்பட்டு நூற்புக் கூடுகள் உற்பத்திக்கு, 100 உற்பத்தி தொகுதிகளுக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும். அரசு பட்டு நூற்பு நிலையங்களுக்கு ரூ.40 லட்சம் சுழல்நிதி வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT