வணிகர்களை மிரட்டி பணம் பறிக்கும் போலி வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா புகார் அளித்துள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை நேற்று நேரில் சந்தித்து அளித்த மனுவில் விக்கிரம ராஜா கூறியிருப்பதாவது:மிரட்டல் கும்பல் கைதுசென்னை தியாகராய நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 10 பேர் கும் பலை கைது செய்த காவல் துறையினருக்கு பாராட்டுக்கள்.
சமீபகாலங்களாக சென்னை நகரில் உள்ள முக்கிய வணிக நிறுவனங்களையும் வணிகர்களையும் குறிவைத்து பிரஸ், மீடியா, பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை துறை நிர்வாகிகள் என்று போலியான அடையாள அட்டை வைத்துக் கொண்டும் தங்கள் வாகனங்களில் அதற்குரிய ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டும் கும்பலாக சென்று மிரட்டுவதும், பணம் பறித்து வருவதும் தொடர்ந்து வருகிறது.
வியாபாரிகள் அச்சம் அடையார் ஆனந்தபவன், முருகன் இட்லி கடை, பாடியில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர் நிறுவனம் என பல இடங்களில் இதுபோன்ற கும்பல்கள் அடாவடித்தனம் செய்து பணம் பறித்ததை அறிந்த வணிகர்கள் மிகுந்த அச்சத்துடன் வியாபாரம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இக்கும்பல்களின் செயல்களால் வணிகர்களின் பாதுகாப்பும், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் கண்ணியமும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, பொது மக்கள், வணிகர்களுக்கு எதிராக செயல்படும் இதுபோன்ற சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.