இருங்காட்டுக்கோட்டையில் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவியருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பட்டங்களை வழங்கினார்.படம்:எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

தோல் தொழிற்சாலைகள் மூலம் 44 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தகவல்

செய்திப்பிரிவு

ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் அமைந்துள்ள காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் 79 மாணவ- மாணவியருக்கு பட்டங்களை வழங்கி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:

கடந்த 30 ஆண்டுகளாக காலணிவடிவமைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம் கொடுக்கும் கல்வி, திறன் வளர்ப்பு, ஆராய்ச்சி, தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனை ஆகியவை உலகத் தரத்தில் உள்ளன. இந்நிறுவனத்தில் படித்தவர்கள் 83 சதவீதம் பேர் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

காலணிகள் மற்றும் தோல் பொருட்களை தயாரிக்கும் பல முக்கிய நிறுவனங்கள் இங்கு படித்தவர்களுக்கு வேலை வழங்கிஉள்ளன. இந்தத் துறையானது ஒவ்வொரு நாளும் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்நிறுவனம் பல்வேறு நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்குத் தொழில் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.

புகழ்பெற்ற இந்த நிறுவனத்தில் நீங்கள் பெற்ற கல்வியும் சான்றிதழும் உங்கள் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும். மாணவர்களது இலக்கு மேலும் உயர்கல்வி கற்பதை நோக்கி விரிவடைய வேண்டும்.

ஏனெனில், இந்தியாவில் உற்பத்தி செய்யும் தோல் பொருட்களின் மதிப்பு 5.69 பில்லியன் அமெரிக்க டாலர். இத்துறையின் மூலம் 44 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். பெண்களுக்கான வேலைவாய்ப்பில் தோல் பொருள் தொழிற்சாலைகள் 30 சதவீதத்தை பூர்த்திசெய்கின்றன.

உலக அளவில் அதிக காலணிகள் தயாரிக்கும் நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 2.41 மில்லியன் காலணிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் காலணிகள் ஏற்றுமதியில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

கடந்த மார்ச் மாதம் இந்நிறுவனம் 6 லட்சத்துக்கு 92 ஆயிரம் பேருக்கு 45 நாட்கள் திறன் வளர்ப்பு பயிற்சியை வழங்கியது. இதில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பெண்கள். சென்னை உட்பட 12 இடங்களில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் படித்தவர்கள் மேற்பார்வையாளர்களாகவும், மேலாளர்களாகவும் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் காலணிகள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அருண்குமார் சின்ஹா, செயல் இயக்குநர் விகாஸ் வர்மா, சார் ஆட்சியர் சரவணன், தோல் ஏற்றுமதி நிறுவன செயல் இயக்குநர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT