ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை (ஐஎம்ஆர்) வைத்துதான் ஒரு நாட்டின் ஆரோக்கியத்தை கணக்கிடுகின்றனர். உயிரிழக்கும் பச்சிளங் குழந்தைகளில், 40 சதவீத குழந்தைகள் ஒரு வாரத்துக்குள்ளும், 60 சதவீத குழந்தைகள் ஒரு மாதத்துக்குள்ளும் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரம் குழந்தைகளுக்கு 33 என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் இது 17-ஆக உள்ளது.
குழந்தை பிறப்பின்போதும், பிறந்த முதல் வாரத்திலும் கூடுதல் பராமரிப்பு தேவைப்படுகிறது. எனவேதான், பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 15 முதல் 21-ம் தேதி வரை பிறந்த குழந்தை பராமரிப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனையின் பச்சிளங் குழந்தைகள் நிபுணர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது: பிரசவம், பிறப்பு மற்றும் பிறந்த பிறகான காலம் ஆகியவையே தாய்-சேய் நலனுக்கு முக்கிய காலகட்டம். பிறந்த குழந்தை இறப்பதற்கான காரணங்களில் குறைமாத பிரசவம்தான் முதன்மையானதாக உள்ளது. சிறுவயதிலேயே திருமணம் செய்தல், ஊட்டச்சத்து குறைபாடு, தாய்க்கு உள்ள சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவையும் குழந்தை உயிரிழப்புக்கு காரணமாகின்றன. தற்போது பல பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர்.
அதன் மூலம் ஏற்படும் மன அழுத்தமும் குழந்தையை பாதிக்கிறது. பிறவியிலேயே உள்ளுறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், எதிர்ப்பாற்றல் குறைவால் ஏற்படும் நோய்த்தொற்று ஆகியவற்றாலும் குழந்தைகள் இறக்கின்றன. இதில், முக்கியமானது நுரையீரலை தாக்கும் நிமோனியோ காய்ச்சல்.
கருவுற்றிருக்கும் பெண்களுக்கு போதிய இரும்புச் சத்து, ஊட்டச் சத்துகள் கிடைக்க வேண்டும். மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்து பராமரிக்க வேண்டும். உடனடியாக, தாய்ப்பால் மட்டுமே ஊட்டத் தொடங்க வேண்டும். ஆனால், சில இடங்களில் ஒரு மணி நேரம் வரை காலதாமதப்படுத்திவிடுகின்றனர்.
குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதங்கள் முதல் 2 வயது வரை தாய்ப்பாலுடன் இணை உணவு அளிக்கலாம். ஓராண்டு காலம் வரை சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போட வேண்டும். 1.5 கிலோவுக்கு கீழ் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு எடை அதிகரிக்க தேவையான வழிவகைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ள வேண்டும்.
ரத்தசோகை பாதிப்பு40 கிலோ எடைக்குக்கீழ் உள்ள பெண்கள், திருமணத்துக்கு முன் தங்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரித்துக் கொள்ள வேண்டும். மன ரீதியாகவும் திருமணமான பெண்கள் பிரசவத்துக்குத் தயாராக இருக்க வேண்டும்.
ரத்தசோகை உள்ள நேரத்தில் கர்ப்பமாகக்கூடாது. முன்பெல்லாம் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் வயதானவர்கள்தான்அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது இளம்பெண்கள் பலர் இவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை ஆகிய மூன்றையும் சரியான அளவில் வைத்திருக்க வேண்டும். இதை சரிசெய்த பிறகே கர்ப்பம் தரிக்க வேண்டும்.
18 வயதுக்குள் கர்ப்பம் தரிக்கக் கூடாது. திருமணமான அல்லது திருமணமாகப்போகும் பெண்கள் சரிவிகித உணவு, வாழ்க்கை முறையில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றைப் பின்பற்றினாலே 75 சதவீத பச்சிளங் குழந்தைகளின் உயிரிழப்பை குறைத்துவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.