சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தான் அடகு வைத்திருந்த 6 சவரன் தங்க நகையை மீட்டு, வீட்டுக்குக் கொண்டு சென்ற பெண் ஒருவர் நகை வைத்திருந்த கைப்பையை சாலையில் தவறவிட்டார். அதைக் கண்டெடுத்த முதியவர் ஒருவர் செல்போனில் அந்தப் பெண்ணை அழைத்து நேர்மையாக நகைப் பையை ஒப்படைத்துள்ளார்.
சென்னை சூளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (34). ராயபுரத்தில் உள்ள முத்தூட் பைனான்ஸ் கம்பெனியில் அடகு வைத்திருந்த தனது 6 சவரன் தங்கச் செயினை மீட்டுள்ளார். பின்னர் மதுரவாயல் கிருஷ்ணா நகரில் உள்ள தனது தாயாரைப் பார்க்கச் சென்றுள்ளார். கோயம்பேடு மார்க்கெட் அருகே நடந்து செல்லும்போது தனது 6 சவரன் நகை அடங்கிய கைப்பையைத் தவற விட்டுள்ளார்.
பாதி தூரம் சென்றவுடன் தனது கைப்பையைத் தேடியவர் அது காணமல் போனதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற போலீஸார் விசாரணை நடத்தி, கண்டுபிடித்துத் தருவதாகத் தெரிவித்து அனுப்பி வைத்துள்ளனர்.
மனச்சோர்வுடன் தாயாரைப் பார்க்க செல்வி சென்றுள்ளார். அப்போது செல்வியின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. "நீங்கள்தான் செல்வியா?" என மறுமுனையில் பேசியவர் கேட்டுள்ளார். ''ஆமாங்க. நான்தான் செல்வி'' என்று கூற, ''அம்மா என் பேர் பழனிசாமி, இங்கே மார்க்கெட் பகுதியில் கீழே சாலையில் ஒரு கைப்பை கிடந்தது. எடுத்து திறந்து பார்த்தேன். அதில் நகையும் ரசீதும் இருந்தது.
ரசீதில் உங்கள் பெயரும் போன் நம்பரும் இருந்தது. அதான் போன் செய்தேன். நீங்கள்தான் நகைக்குச் சொந்தக்காரரா?'' என அவர் கேட்டுள்ளார்.
''ஐயா... அந்த நகைப்பையைத்தான் தொலைத்துவிட்டு இப்போதுதான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துட்டு அம்மா வீட்டுக்குப் போகிறேன். தெய்வம் மாதிரி நீங்க போன் செய்றீங்க'' என்று செல்வி உடைந்த குரலில் கூறி நன்றி தெரிவித்துள்ளார்.
''ஒன்றும் பயப்படாதம்மா, உழைச்ச பணம் எங்கும் போகாது. பதற்றப்படாமல் இந்த இடத்துக்கு வா'' என முகவரியைக் கூறியுள்ளார். ''அப்படியே போலீஸ் ஸ்டேஷனிலும் விஷயத்தைச் சொல்லிவிடு'' என்று பழனிசாமி கூற, செல்வி அதன்படி போலீஸ் ஸ்டேஷனில் தகவலைச் சொல்லிவிட்டு குறிப்பிட்ட அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளார். போலீஸாரும் அங்குவர அவர்கள் முன்னிலையில் பெரியவர் பழனிசாமி நகைப் பையை செல்வியிடம் ஒப்படைத்துள்ளார்.
செல்வி அவருக்கு நன்றி தெரிவித்தார். போலீஸார் பெரியவர் பழனிசாமியின் நேர்மையைப் பாராட்டினர்.
காவல் ஆணையரிடம் விருதுக்காகப் பரிந்துரைப்பதாக பழனிசாமியிடம் போலீஸார் தெரிவித்தனர்.