தமிழகம்

தேர்தல் ஆணையத்தில் 5 மாதங்களில் 3 செயலாளர்கள் மாற்றம் ஏன்?- சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கேள்வி  

செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தல் நடத்த உள்ள நிலையில் 5 மாதங்களில் 3 செயலாளர்கள் மாற்றப்படுவது ஏன் என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து சட்டப் பஞ்சாயத்து இயக்க நிர்வாகி செந்தில் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கை:

“லட்சக்கணக்கான உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டிய மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பதவி என்பது அதி முக்கியமானது. இப்பதவியானது தொடர்ந்து பந்தாடப்பட்டு வருகிறது. 6 மாதங்களில் மூன்று செயலாளர்களைக் கண்டுள்ளது மாநிலத் தேர்தல் ஆணையம்.

செயலாளர் 1: 2016- ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து கடந்த 3 ஆண்டுகள் செயலாளராகப் பணியாற்றி வந்தவர் டி.எஸ்.ராஜசேகர் ஐஏஎஸ். இவர் கடந்த ஜூன் மாதத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டார். அவர் பின்னர் நீண்ட விடுப்பில் சென்றார். நேற்று அவர் மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செயலாளர் 2: பேரூராட்சிகளின் இயக்குனராக இருந்த எஸ்.பழனிச்சாமி மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளராக 5 மாதத்துக்கு முன் நியமிக்கப்பட்டார் (2019 ஜூன்). அப்போதும் கூட முழுமையாக தேர்தல் ஆணையப் பணிகளைச் செய்ய விடாமல் பேரூராட்சி இயக்குனர் பணியும் கூடுதல் பொறுப்பாக அவருக்கு வழங்கப்பட்டது.

நேற்று இவர் மீண்டும் பேரூராட்சிகளின் இயக்குனராக, மாநிலத் தேர்தல் ஆணையர் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு பணியாற்றி வந்த அதே பொறுப்பிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

செயலாளர் 3: விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த சுப்ரமணியன் மாநில தேர்தல் ஆணையச் செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை செயலாளர் டிரான்ஸ்பர் என்பது தேர்தலை தள்ளிப்போடுவதற்கான உத்தியாக இருந்தது. நேற்றைய மாற்றம் என்பது உள்ளாட்சித் தேர்தலை நன்றாக நடத்துவதற்காகவே என்று நம்புவோம்”.

இவ்வாறு செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT