மதுரை
"உள்ளாட்சித் தேர்தலை கண்டு ஸ்டாலின் பம்முகிறார்" என்று கூட்டுறவுத்துறைத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2019 மேயர், மாமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பமனு பெறும் நிகழ்வு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெயலலிதா இருக்கும்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட எப்படி விருப்ப மனுக்களை வாங்கினார்களோ அதேபோன்ற ஆர்வத்துடன்தான் கட்சியினர் தற்போதும் விருப்ப மனுக்களை வாங்கி வருகின்றனர்.
உள்ளாட்சித் துறையில் நிர்வாக ரீதியாக மட்டுமே செயலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் வேறு எந்தக் காரணம் இல்லை.
தேர்தல் ஆணையர் வேறு, தேர்தல் ஆணையத்தின் செயலாளர் வேறு. இந்த வேற்றுமைகூட தெரியாமலேயே திமுக தலைவர் ஸ்டாலின் தவறான தகவலைத் தெரிவிக்கிறார். பின்னர் ட்விட்டரில் இருந்து தகவலை நீக்குகிறார். எதையும் ஆழமாகத் தெரிந்து கொள்ளாமல் அறிக்கைகளை வெளியிடுகிறார். அவருக்கு அரசியல் நுண்ணறிவு இல்லை.
ஆனால், தமிழக அரசைக் குறை சொல்ல மட்டுமே திட்டம் போட்டு வருகிறார் ஸ்டாலின்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என பேட்டி கொடுத்தவர்கள் முனைப்பு காட்டியவர்கள் திமுகவினர். தற்போது உள்ளாட்சித் தேர்தல் குறித்து எதுவுமே பேசாமல் ஸ்டாலின் பம்முகிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் மு.க.ஸ்டலினுக்கு என்ன நோக்கம் இருக்கிறது என்பது தெரியவில்லை.
வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்பது மு.க.அழகிரியின் தனிப்பட்ட கருத்து. அந்த வெற்றிடத்தை அதிமுக நிரப்பிவிட்டது என ஆணித்தரமாக கூறுவோம்.
அதிமுக ஆட்சியில் தான் நதிநீர் பிரச்சனை வேகமாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஐஐடி மாணவி தற்கொலை வருத்தமானது.
மாணவர்கள் ஒழுக்கத்தோடு தன் குடும்பத்தை பின்புலத்தைப் பார்த்து எதிர்காலம் கருதியும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
மிகச்சிறந்த பாதுகாப்பு கட்டமைப்பு தமிழகத்தில் தான் உள்ளது. மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். அச்சப்படதேவையில்லை" என்றார்.