சிவகாசி
மாமன், மச்சான் உறவுகளைக் கடந்து அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
திருத்தங்கல் நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, "உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இதில் விருதுநகர் மாவட்டத்தில் 7 நகராட்சி, 11 ஒன்றியக் குழுத் தலைவர்கள், பேரூராட்சிகள், 21 மாவட்டக் கவுன்சிலர்கள் பதவிகள் உள்ளன. மேலும் நகராட்சி, ஒன்றியக் கவுன்சிலர்கள் பதவிகள் உள்ளன.
ஒவ்வொரு பகுதியிலும் தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நிர்வாகிகளிடம் விருப்ப மனு கொடுங்கள். நாங்கள் ஆராய்ந்து வாய்ப்பு கொடுப்போம்.
நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. அதே வெற்றியை உள்ளாட்சித் தேர்தலிலும் பெற வேண்டும். மாமன், மச்சான் உறவுகளைக் கடந்து கட்சி அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.