நடப்பாண்டில் ரூ.500 கோடி செலவில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருவதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ.15) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை கட்டிடங்கள் மற்றும் நீர்வள ஆதாரத் துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:
"சட்டப்பேரவையில் சட்டமன்ற 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன, நடந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், குடிமராமத்து திட்டம். பருவ காலங்களில் பெய்து வரும் மழைநீர் முழுவதும் சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறப்பு திட்டமாக, மக்களோடு மக்கள் இயக்கமாக இதை உருவாக்கி இந்த குடிமராமத்து திட்டத்தை, கடந்த மூன்றாண்டுகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
இந்த நடப்பாண்டைப் பொறுத்தவரைக்கும், சுமார் 500 கோடி ரூபாயில் 1,829 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, இன்றைக்கு பல ஏரிகளுடைய பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சில இடங்களில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் ஜெயலலிதாவின் கனவுத் திட்டமாகும். அந்தப் பகுதி மக்கள் எண்ணியிருந்த அந்தக் கனவுத் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டு, அந்தத் திட்டம் இப்பொழுது நடைபெற்று வருகிறது.
தடுப்பணைகள், மூன்றாண்டு காலத் திட்டமாக ஆயிரம் கோடி ரூபாயில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்தோம். அதன் வாயிலாக அந்தப் பணிகள் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.