கோவில்பட்டி
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பைச் சேர்ந்த 4 வயது சிறுவன் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சோகம் மறைவதற்குள் அங்கு மேலும் ஒரு சிறுமி பலியானார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட சௌந்தரராஜன் பொண்மணி தம்பதியின் 3 வயது மகள் பிரக்கியா மர்ம மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று (நவ.15) காலை பலியானார்.
முன்னதாக நேற்று பிரவீன்குமார் என்ற 4 வயது சிறுவன் மர்மக் காய்ச்சலுக்குப் பலியானார்.
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ். சமையலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமாமகேஷ்வரி. இவர்களது மகன் பிரவீன்குமார்(4). இவர் கோவில்பட்டியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.
இந்நிலையில், பிரவீன்குமாருக்கு கடந்த 4-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பெற்றோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பிரவீன்குமாருக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து அனுப்பினர். இதில் காலையில் காய்ச்சல் இல்லாத நிலையில், மாலையில் காய்ச்சல் ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையே கடந்த 11-ம் தேதி அவரை கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அங்கு பிரவீன்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மந்தித்தோப்பு கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
மக்களுக்கு அறிவுறுத்தல்:
இதற்கிடையே, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஏ.டி.போஸ்கோ ராஜா கூறும்போது, "மந்தித்தோப்பு கிராமத்தில் சிறுவன் பிரவீன்குமார் இறந்தது தொடர்பாக விசாரித்து வருகிறோம். பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் தொடர்ந்தால் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், தங்களது வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரமற்று இருந்தால் உடனடியாக உள்ளாட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும்" என்றார்.