தமிழகம்

பாதிக்கப்பட்டவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலையில் நெல்லையில் கொடிகட்டி பறக்கும் கந்துவட்டி தொழில்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி, கந்துவட்டி கொடுமையால் கூலித்தொழிலாளி இசக்கிமுத்து தனது குடும்பத்தினருடன் தீக்குளித்து இறந்த சம்பவத்துக்கு பின்னரும் கந்துவட்டி கொடுமை நீடிப்பதை நேற்று ஒரு குடும்பம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வெளிச்சமிட்டுள்ளது.

தமிழகத்தில் பெரிய அளவுக்கு தொழில், வேலைவாய்ப்புகள் இல்லாத பின்தங்கிய பகுதியாக திருநெல்வேலி மாவட்டம் உள்ளது. இங்குள்ள தொழிலாளர் களின் கஷ்டத்தை கந்துவட்டிக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர். தொடக்கத்தில் உதவுவதுபோல் கடனுக்கு பணத்தை கொடுக்கும் கந்துவட்டி தொழில்புரிவோர், பின்னர் மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, நாள் வட்டி, வார வட்டி என்று சுரண்டலை தொடங்குகின்றனர். இதனால் கடன் வாங்கியவர்கள் முதலை செலுத்த முடியாமல் திணறுகின்றனர்.

வட்டி செலுத்தாவிட்டாலோ, வாங்கிய பணத்தை செலுத்தாவிட்டாலோ கந்து வட்டிக்காரர்கள் பணம் வாங்கியவர்களை மனம், உடல் ரீதியாக துன்புறுத்துவது தொடர்கிறது. இதுகுறித்து போலீஸார், மாவட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித் தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் கந்துவட்டியால் பாதிக்கப்படும் சிலர் தற்கொலை எண்ணத்துக்கு செல்கின்றனர்.

அந்த வகையில் தான் திருநெல்வேலி அருகே உள்ள மேலகருங்குளத்தைச் சேர்ந்த அருள்தாஸும் தனது குடும்பத் தினருடன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றுள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடை பெறும் மக்கள் குறைதீர் கூட்டங்களில் கந்துவட்டி கொடுமை குறித்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் அவற் றின் மீதான தீர்வு கேள்விக் குறியாகவே தொடர்கிறது.

பாளையங்கோட்டையில் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் கந்துவட்டி கொடுமை யால் நகை தொழிலாளி கோபால் மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் சயனைடு தின்று தற்கொலை செய்துகொண்டனர். வள்ளியூரில் பள்ளி ஆசிரியர் பாபு இளங்கோ(48) என்பவர் கந்துவட்டி கொடு மையால் தற்கொலை செய்துகொண்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் இதுபோல் கந்துவட்டியால் உயிரை மாய்த்தவர்கள், தற்கொலைக்கு முயன்றவர்கள் அதிகம்.

முக்கியத்துவம் அளிப்பதில்லை

எழுத்தாளர் கே.ஜி. பாஸ்கரன் கூறியதாவது:

கந்துவட்டி கொடுமை தொடர்பாக போலீஸாரிடம் புகார்கள் வந்தால், அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து விசாரிக்கும் போக்கு தற்போது இல்லை. புகார்களை தட்டிக்கழிக்கிறார்கள். இது சிவில் மேட்டர் என்று நீதிமன்றத்துக்கு செல்லுமாறு தெரிவித்துவிடுகிறார்கள். இதனால் சாமானியர்கள் திணறிப் போய்விடுகிறார்கள். அதேநேரத்தில் ஒருசில போலீஸ் அதிகாரிகள், புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் மறுப் பதற்கில்லை. தங்களுக்கு எந்தவகை யிலும் நியாயம் கிடைக்கவில்லை என்று தான் சாமானிய மக்கள் தீக்குளிக்கும் முடிவுக்கு வருகின்றனர். கந்துவட்டி கொடுமையை தடுக்க அரசும், பொதுநல அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும். காவல்துறையின் அலட்சியம் களையப்பட வேண்டும்” என்று கூறினார்.

3 ஆண்டு கடுங்காவல் சிறை

சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரம்மா கூறியதாவது:

தினவட்டி, மணிநேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் என வரைமுறை இல்லா வட்டி தொகையை எவரேனும், அவரால் கொடுக்கப்பட்ட கடன் தொகைக்கு கந்துவட்டியாக வசூலிப்பது, தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி தடுப்பு சட்டம் 2003 பிரிவு 4-ன் படி தண்டனைக்குரிய குற்றம்.

ஆண்டுக்கு 18 சதவீதத்துக்கு மேல் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது தடை, அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கலாம்.

இந்த சட்டத்தின்கீழ் போலீஸார் வட்டி மற்றும் அபராத வட்டி வசூலிக்கும் வட்டிக்காரர்களுக்கு எதிரான புகார்களை கருத்தில் எடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கந்துவட்டிக்காரர்களுடன் உள்ளூர் போலீஸார் கைகோத்து செயல்படுவதால் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதில்லை. நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் கந்துவட்டி வழக்குகளின் முன்னேற்றம் குறித்து காவல்துறை உரிய விவரங்களை அளிப்பதில்லை” என்றார் அவர்.

SCROLL FOR NEXT