கோவை
ஜெர்மன் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத் தின் கீழ் கோவையில் கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.
கோவை மாநகரில் 4.50 லட்சத் துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மாற்றத்துக்கு ஏற்ப, மாநகரில் பழைய கட்டிடங்களை இடித்து, புதிய கட்டிடங்களை கட்டுவது அதிகரித்துள்ளது. பழைய கட்டிடங்களை இடிக்கும் போது கிடைக்கும், பல டன் கணக்கிலான கட்டிடக் கழிவுகள் பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த கிணறுகள், பள்ளங்களை மூட பயன்படுத்தப்படுகின்றன. தவிர, பிரத்யேகமாக 18 இடங்கள் கட்டிடக்கழிவுகளை கொட்ட ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் முக்கிய சாலை ஓரங்கள், நீர்நிலை ஓரங்களில் மர்ம நபர்கள் கட்டிடக்கழிவுகளை கொட்டிச் செல்வது தொடர்கிறது. இதனால் நீர்நிலை மாசு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே, கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
‘கட்டிடக்கழிவுகளை மறுசுழற்சி செய்து, பயன்தரும் பொருட்களாக மாற்ற, மறுசுழற்சி மையம் கோவையில் அமைக்கப்படும்’ என சில ஆண்டுகளுக்கு முன்னர், அப்போதைய தமிழக முதல்வராக இருந்த, ஜெ.ஜெயல லிதா அறிவித்தார். இதை தொடர்ந்து, கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையத்துக்கான பணி களை மாநகராட்சி நிர்வாகத்தினர் தொடங்கினர். முதலில் மாநகராட்சி, தனியார், பொது மக்கள் பங்களிப்புடனும், பின்னர் தனியார் பங்களிப்புடனும் இத்திட் டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது,‘‘ மாநகரில் தினசரி சராசரியாக 100 டன் வரை கட்டிடக்கழிவு குவிகிறது. டெல்லி, புனே ஆகிய மாநகரங்களில் மட்டுமே கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையம் உள்ளது.
3-வதாக கோவையில் இத்திட்டத்தை செயல்படுத்த, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தம் மூலம், சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு திட்டப்பணி ஒப்படைக்கப்பட்டது.
உக்கடம் கழிவுநீர் பண்ணை சாலையில், மாநகராட்சிக்கு சொந்தமான 15 ஏக்கரில், இம்மையம் அமைத்து, மறுசுழற்சி செய்து பேவர் பிளாக் கற்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்துக்காக எடுக்கப்படும் ஒரு டன் கழிவுகளுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.567, அந்த தனியார் நிறுவனத்துக்கு கட்டணமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அளிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அந்த நிறுவனத்தினர் திட்டப் பணியை தொடங்காததால், அவர் களுடனான ஒப்பந்தம் கடந்தாண்டு இறுதியில் ரத்து செய்யப்பட்டது. தற்போது மாநகராட்சியே இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது’’ என்றனர்.
மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கூறும் போது,‘‘ கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையத்துக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அகமதாபாத், ஹைதராபாத், டெல்லி ஆகிய 3 நகரங்களுக்கு துணை ஆணையர் தலைமை யிலான குழுவினர் வரும் 18-ம் தேதி செல்கின்றனர். இவர்கள், மேற்கண்ட நகரங்களில் கட்டிடக் கழிவுகள் எப்படி மறுசுழற்சி செய்யப்படுகிறது, என்ன தொழில்நுட்பங்களை பயன்படுத்து கின்றனர் என நேரடியாக கண்டறிந்து ஆலோசனை பெற்று வருவர்.
தவிர, இத்திட்டத்துக்காக ஜெர்மன் நாட்டின் ஜிஐஇசட் நிறுவனம் மூலமும் தொழில்நுட்ப ஆலோசனை பெறப்படுகிறது. இவர்கள், உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கட்டிடக்கழிவுகளை அழிக்க மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து, நமக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவர். அதுவும் பயன்படுத்திக் கொள்ளப்படும். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கேற்ப திட்ட மதிப்பீடும் மாறலாம்’’ என்றார்.