சென்னையில் நேற்று நடந்த ஆட்டோ ரேஸில் ரேஸ் சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். சென்னையில் ஆட்டோ ரேஸ் எப்படி நடத்தப்படுகிறது. அதன் பின்னணி குறித்த ஒரு பதிவு.
சென்னையை அடுத்த போரூர் - தாம்பரம் பைபாஸ் சாலையில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட ஆட்டோ ரேஸில் வேகமாகச் சென்ற ஆட்டோ, கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோதிக் கவிழ்ந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநரான பிரபாகரன் உயிரிழந்தார்.
ஆட்டோ ரேஸ் கடந்த 30 ஆண்டுகளாக சென்னை மற்றும் புறநகரில் நடக்கிறது. 1980களிலேயே இது ஆரம்பித்தது. சென்னையில் ரேஸ் என ஆரம்பித்தது என்றால் அது ஆட்டோ ரேஸாகத்தான் இருக்கும். அதன் பின்னர் இருசக்கர வாகனங்கள் பெருக்கம் அதிகரித்தபோது யமஹா மற்றும் சுசுகி கம்பெனியின் ஒருவகை மாடலுக்கு ரேஸில் அதிக மவுசு இருந்தது.
ஆனால் தற்போது சென்னையில் அதிவேக மோட்டார் சைக்கிள்களை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவதால் மோட்டார் சைக்கிள் பந்தயம் அதிகம் நடத்தப்படுகிறது. கார் ரேஸும் நடக்கிறது. இதனால் ஆட்டோ ரேஸ் நடப்பது அவ்வளவாகத் தெரிவதில்லை. ஆனால் சில மணிநேரத்தில் லட்சக்கணக்கில் ரேஸ் நடத்துபவர்களும், பந்தயம் கட்டுபவர்களும் பணம் பார்க்கும் தொழிலாக ஆட்டோ ரேஸ் உள்ளது.
அப்போதைய புறநகர் காவல் ஆணையர் ஜாங்கிட் இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். ஆனாலும் விடியற்காலை, நள்ளிரவில் ஆட்டோ ரேஸ் நடப்பது வழக்கம். ரேஸ் நடத்துவதற்கென்று பைனான்சியர்கள் அல்லது ஆட்டோ முதலாளிகள் உள்ளனர். ரேஸ் நடத்த இவர்கள் நாள், நேரம், இடம், தொகை உள்ளிட்டவற்றைக் குறிப்பார்கள். ஆட்டோ ரேஸ் பெரும்பாலும் புறநகர் பகுதிகள், அவுட்டர் ரிங் சாலைகள், ரெட் ஹில்ஸ், பைபாஸ் சாலைகளில் நடக்கும்.
பெரும்பாலும் வார விடுமுறை நாட்களில் ஆட்டோ ரேஸ் நடப்பது வழக்கம். சில நாட்கள் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாட்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ரேஸ் நடக்கும். ரெட் ஹில்ஸ் டீம், அடையாறு டீம், சைதாப்பேட்டை டீம் என பல குழுக்கள் சென்னையில் உள்ளன. இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டி ஆட்டோ ரேஸில் கலந்து கொள்வார்கள்.
10 ஆட்டோக்கள் கலந்துகொண்டால் 8 ஆட்டோக்கள் கட்டும் பந்தயத் தொகையை வெல்பவருக்கு பரிசுத்தொகையாக அளிக்கப்படும். 2 ஆட்டோக்களின் பந்தயத் தொகையை ரேஸ் நடத்துபவர்கள் எடுத்துக்கொள்வார்கள். தங்கச்சங்கிலி, புது ஆட்டோ எனப் பல பரிசுகள் இந்த ரேஸில் வழங்கப்படுவது வழக்கம். இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது ஆட்டோ ரேஸ் நடத்துபவர்கள், ரேஸில் கலந்து கொள்பவர்களை விட மேல் பந்தயம் அதாவது சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கே வருமானம் அதிகம்.
எந்த ஆட்டோ முன்னால் வரும் என்று மேல் பந்தயம் கட்டுவார்கள். இதில் ஆயிரக்கணக்கானோர் பணம் கட்டுவார்கள். ரேஸ் நடத்துவதை விட எந்த ஆட்டோ வெல்லும் என சூதாட்டத்தில் பணம் கட்டுவதில்தான் பணம் அதிகம் புரளும். லட்சக்கணக்கில் பணம் புரளும்.
ஒருநாள் சில மணிநேரத்தில் இவர்கள் லாபமாக மட்டும் லட்சக்கணக்கில் பணம் பார்ப்பார்கள். இதில் மோசடியாக வெல்லப் பார்ப்பதால் தகராறு நடக்கும். முன்னால் செல்லும் ஆட்டோக்களை முந்திச் செல்ல இடித்துத் தள்ளுவது எல்லாம் நடக்கும். இதைத் தவிர ஆட்டோக்களுக்கு வழிவிடுவதற்காகவும் இடையூறு இல்லாமல் செல்வதற்காகவும் ஒரு ஆட்டோவிற்கு 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஆட்கள் உடன் செல்வார்கள். இவர்கள் கண்காணிப்பது, வழி ஏற்படுத்தித் தருவது உள்ளிட்ட வேலைகளைச் செய்வார்கள்.
யார் மீதாவது மோதினால் அல்லது விபத்தில் சிக்கினால் ரேஸ் நடத்துபவர்கள் பொறுப்பாக மாட்டார்கள். இதே மனநிலையில் உள்ள மெக்கானிக்குகள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு குரூப்பாக இணைவார்கள். ஆட்டோக்களை இதற்காகத் தயார் செய்யும் மெக்கானிக்குகள் பிரபலம். புயல், ஸ்டார், பானை என பல பிரபலங்கள் உள்ளனர். இவர்களிடம் ரேஸுக்காக ஆட்டோவைக் கொடுப்பவர்கள் அதிகம். ஆட்டோக்களில் இதற்கான சின்னங்களைப் பொறித்துக்கொண்டு சுற்றுவார்கள்.
இவர்கள் ரேஸ் நடத்துவது ரகசியமாக வைக்கப்படும். ரேஸுக்காக ஆட்டோவைத் தனியாகத் தயார் செய்வார்கள். ஆட்டோவின் டாப்பை காற்று தடை செய்யா வண்ணம் முன் பக்கம் சற்று இறக்கி வைப்பார்கள். இதற்காக கண்ணாடியின் உயரம் குறைக்கப்படும். அதேபோன்று ஆட்டோ வேகமாகச் செல்வதற்காக போர், பிஸ்டன், சைலன்ஸர் மற்றும் கார்பரேட்டர் மாற்றப்படும். வேகம் அதிகரிப்பதற்காக கார்பரேட்டர் மாற்றி அமைக்கப்படும்.
இதனால் ஆட்டோ மைலேஜ் தராது. ஆனால் வேகம் கடுமையாக இருக்கும். பொதுவாக ஆட்டோக்கள் அதிகபட்ச வேகம் 80 கி.மீ. கொடுத்திருப்பார்கள். ஆனால் 60 கிலோ மீட்டர் வேகத்தில்கூட போக முடியாது. ரேஸுக்காக மாற்றியமைக்கப்படும் ஆட்டோக்கள் மணிக்கு சாதாரணமாகவே 80 கி.மீ. வேகம் செல்லும்.
இதை ஓட்டும் ஓட்டுநர்கள் ஆட்டோக்களை ஓட்டும் சாதாரண ஓட்டுநர்களாக இருக்க மாட்டார்கள். பெரும்பாலும் மெக்கானிக்குகளாகவும், ரேஸ் டிரைவிங் செய்யும் மனநிலை கொண்ட ஓட்டுநர்களாகவும் இருப்பார்கள். கூடுதல் தைரியத்திற்கு மது, கஞ்சாவைப் பயன்படுத்துவார்கள். இது தவிர ஆட்டோவை இரு சக்கரத்தில் ஓட்டுவது, ஆட்டோவில் சாகசம் செய்வது என பயிற்சி பெற்றிருப்பார்கள்.
போலீஸாருக்குத் தகவல் தெரிந்தால் அந்த போலீஸ் எல்லையிலிருந்து மேலும் 10 கிலோ மீட்டர் தள்ளிச் சென்று நடத்துவார்கள். இதற்கு பந்தயத் தொகை ரூ.1 லட்சம், அல்லது புது ஆட்டோ என இருக்கும். ரேஸுக்குச் செல்பவருடன் ஆட்டோவில் உடன் ஒருவர் அல்லது இருவர் செல்வார்கள். போலீஸார் என்னதான் சோதித்தாலும் இவர்கள் ஏமாற்றிவிட்டு ரேஸ் நடத்தி வருகின்றனர்.
ஆட்டோக்கள் வேகமாக குறிப்பிட்ட தூரத்தைக் கடப்பது (இதுதான் பெரும்பாலும் நடக்கும் ரேஸ்), பின்னால் ஆட்டோ ஓட்டுவது, இருசக்கரத்தில் கீழே விழாமல் குறிப்பிட்ட தூரம் ஓட்டுவது என பலவகையான ரேஸ் வகைகள் உண்டு. பெரும்பாலும் பல ஆட்டோக்கள் கலந்துகொண்டு குறிப்பிட்ட இலக்கை வேகமாகச் சென்று அடைவதுதான் அதிக அளவில் நடக்கிறது. இதில் விபத்து நடக்கிறதா என்றால் அதிக அளவில் நடக்கும். ஆனால் தெளிவாக ஏதோ சவாரி வந்தது போலவும் , விபத்து நடந்தது போலவும் மாற்றிச் சொல்வார்கள்.
சமீபத்தில் ரேஸுக்கு ஆட்டோவைத் தயார் செய்யும் நபர்களைப் பிடித்து போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் ரேஸ் நடக்கத்தான் செய்கிறது. பெரும்பாலும் புறநகர்களில், பைபாஸ் சாலைகளில் நடப்பதால் போலீஸாரால் கண்காணித்துப் பிடிக்க முடியவில்லை. நேற்று (14/11/19) அதிகாலையில் இவ்வாறு ரேஸ் செல்லும்போது நடந்த விபத்தில்தான் மெக்கானிக் பிரபாகரன் உயிரிழந்துள்ளார். உடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் தனது செல்போனில் எடுத்த வீடியோவில்தான் விபத்துக் காட்சி பதிவாகியுள்ளது.
போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நடத்தப்படும் இத்தகைய ரேஸ்கள் தடுக்கப்பட்டு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.