சென்னை
‘வளர்ச்சிக்கடன் அளித்து தமிழகத்தின் நீடித்த நிலைத்த வீட்டுவசதி திட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும்’ என்று உலக வங்கி அதிகாரிகளிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.
அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் சிகாகோவில் இருந்து வாஷிங்டன் நகருக்கு சென்றார். அங்குள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத் தில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, பூடான் நாடுகளுக்கான உலக வங்கி செயல் இயக்குநர் எஸ்.அபர்ணா உள்ளிட்ட அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஓபிஎஸ் பேசிய தாவது:
தமிழகத்தின் சமூக, பொருளா தார முன்னேற்றத்தில் உலக வங்கி பெரும் பங்காற்றியுள்ளது. தமிழகத்தில் நிலைத்த நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, நீர்வள நவீனமயமாக்கல், அணை புனரமைப்பு மற்றும் மேம்பாடு, கடலோர பேரிடர் ஆபத்துகளை குறைத்தல், ஊரக மேம்பாடு ஆகிய 6 திட்டங்கள் உலக வங்கி உதவியுடன் தற்போது செயல் படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உலக வங்கி மீண்டும் இணைகிறது. தற்போது, தமிழ்நாடு நீடித்த நிலைத்த வீட்டுவசதி மற்றும் குடியிருப்புகள் திட்டத்தை உலக வங்கி ஊழியர்களுடன் இணைந்து தமிழக அரசு தயாரித்து வருகிறது. இதில், பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளன. எனவே, சில தொடக்க முதலீடுகளுடன், வளர்ச்சிக் கடனும் அளித்து தமிழகத்தின் நீடித்த நிலைத்த வீட்டுவசதி திட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும்.
குடிநீர், தண்ணீர் மறுபயன்பாடு, நீர் பாதுகாப்பு, நகர் போக்குவரத்து இணைப்புகள் உள்ளடக்கிய பல் வேறு முக்கிய அம்சங்கள் அடிப் படையில், சென்னை மாநகரை நிர்வகிக்கும் விதத்தில், ‘சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உலக வங்கியும் தமிழக அரசும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இத்திட்டத்தின் மீதான பேச்சுவார்த்தை வேகமாக அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்.
இவ்வாறு துணை முதல்வர் பேசினார்.
இதையடுத்து, சர்வதேச நாணய நிதியம் அலுவலகத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நிதித் துறை செயலர் எஸ்.கிருஷ்ண னுடன் சென்றார். அங்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், பூடான் நாடு களுக்கான செயல் இயக்குநர் சுர்ஜித் பல்லா உள்ளிட்ட அதிகாரி களை சந்தித்தார். அவர்களிடம் ஓபிஎஸ் பேசியதாவது:
நிதி மேலாண்மையில் தமிழகம் சிறந்த பாதையில் கவனமுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. நிதி நிர்வாக பொறுப்புடைமை சட் டத்தின் அடிப்படையில் நிதி சீர் திருத்தங்களையும் மேற்கொண் டுள்ளது. இந்திய அரசுடன் மட்டும் இதுவரை ஒருங்கிணைந்து செயல் பட்டு வந்த சர்வதேச நாணய நிதியம், தற்போது மாநிலங்களு டனும் இணைந்து செயல்பட முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்துவமான பிரச்சினைகள் இருப்பதால், நாடு தழுவிய கொள் கைகளை வகுக்கும்போது, மாநி லங்களின் தேவைகளை சர்வதேச நாணய நிதியம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தின் பொது நிதி மேலாண்மையை மேலும் மேம்படுத்துவது குறித்த சர்வ தேச நாணய நிதியத்தின் தொழில் நுட்பம், ஆலோசனை, நிபுணத் துவம் ஆகியவற்றை பெற தமிழக அரசு விரும்புகிறது. இது தொடர் பான ஆய்வை சர்வதேச நாணய நிதியம் மேற்கொள்ள ஒப்புக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.