சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடியை அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி ஏற்றி வைத்தார் | படம்:ம.பிரபு 
தமிழகம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடி: கே.எஸ்.அழகிரி ஏற்றி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடியை அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி ஏற்றி வைத்தார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டை ஓராண்டு முழுவதும் கொண்டாட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை அக்கட்சி நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடிக் கம்பம் அமைக்க கடந்த செப்டம்பர் 21-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

பணிகள் முடிந்த நிலையில், ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நேற்று, 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடியை கே.எஸ்.அழகிரி ஏற்றி வைத்தார். 4 டன் இரும்பால், ரூ.25 லட்சம் செலவில் இந்த கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 30 அடி உயரம், 45 அடி அகலத்தில் காங்கிரஸ் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. வட சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராயபுரம் மனோ ஏற்பாட்டில் இந்த கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கொடிக் கம்பம் அமைக்கும் பணிக்காக சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ரூ.1 லட்சத்தை மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் வழங்கினார்.

சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் 116 அடி உயர கம்பத்தில் திமுக கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதை அமைத்த நிறுவனமே காங்கிரஸ் அலுவலகத்திலும் 150 அடி உயர கொடி கம்பத்தை அமைத்து கொடுத்துள்ளது.

நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

ரஃபேல் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு அளித்த ஆவணங் களின் அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை 7 பேர் கொண்ட அமர் வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றி உள்ளது. இந்த விவகாரத்தில் கேரள அரசும், பக்தர்களும்தான் முடிவெடுக்க வேண்டும். ஆண்களும், பெண்களும் சமம் என்ற அடிப்படையில் கடவுளை வழிபட பெண்களுக்கு உரிமை உண்டு.

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தப்படும். அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியிருக்கிறார். சிவாஜி தமிழுக்கு பெருமை சேர்த்த உலக நடிகர். எனவே, அவரது மதிப்பை குறைக்கும் வகையில் முதல்வர் பேசியிருப்பது சரியல்ல.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

SCROLL FOR NEXT