சென்னை
திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி தூத்துக்குடி எம்.பி. யாக வெற்றி பெற்றது செல் லாது என அறிவிக்கக் கோரி வாக்காளர் ஏ.சந்தானகுமார் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் இந்தத் தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் அதை நிராகரிக்க வேண்டும் என கனிமொழி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி எஸ்.எம்.சுப்ர மணியம் முன்பாக நடந்தது.
அப்போது கனிமொழி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ‘‘கனிமொழியின் கணவர் வருமானத்தை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்றும், கனிமொழி சென்னையைச் சேர்ந்தவர், ஆனால் தூத்துக் குடியைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார் எனக் கூறி இந்தத் தேர்தல் வழக்கு போடப்பட்டுள்ளது.
கனிமொழியின் கணவ ருக்கு இந்தியாவில் பான் கார்டு இல்லை என்பதால் அவரது வருமானத்தைக் குறிப்பிட வில்லை. அதேபோல தூத்துக் குடி தொகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டதிலும் எந்தத் தவறும் இல்லை. ஆகவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கனிமொழி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.