தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் உண்மைதான். அதை ரஜினி வந்து நிரப்புவார் என மு.க.அழகிரி சென்னையில் பேட்டி அளித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் மு.க.அழகிரிக்கு திமுகவில் பெரிய பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார் அழகிரி. அழகிரியின் எதிர்ப்பு கட்சிக்குள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. பெருவாரியான ஆதரவுடன் ஸ்டாலின் தலைவரானார். அழகிரி முற்றிலும் ஒதுங்கிவிட்டார். இடையில் பாஜகவிற்குச் செல்வார் என பேசப்பட்டதை அழகிரி மறுத்தார்.
நடிகர் ரஜினிகாந்த கடந்த ஆண்டு எம்ஜிஆர் சிலையைத் திறந்துவைத்து பேசும்போது, ''ஜெயலலிதா, கருணாநிதி இருவர் மறைவுக்குப் பின் தமிழகத்தில் சரியான ஆளுமை இல்லை. அவர்கள் இடம் வெற்றிடமாக உள்ளது. நான் அரசியலுக்கு வருவேன். அந்த வெற்றிடத்தை நிரப்புவேன். எம்ஜிஆர் ஆட்சியைக் கொடுப்பேன்'' என்றார்.
ரஜினியின் இந்தப் பேச்சு கடும் விமர்சனத்துக்குள்ளானது. முக்கியமாக அதிமுக அமைச்சர்கள் ரஜினியைக் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அதில் திமுக கூட்டணி பெருவாரியான வெற்றி பெற தமிழகத்தின் தலைமை நிரப்பப்பட்டுவிட்டது. ஸ்டாலின்தான் தலைவர் என திமுகவினர் தெரிவித்தனர்.
சமீபத்தில் சென்னையில் பேட்டி அளித்த ரஜினி, ''தான் கட்சி ஆரம்பிக்கும் வரை சினிமாவில் நடிப்பேன். தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை. அதேபோன்று திருவள்ளுவருக்கும் எனக்கும் காவிச் சாயம் பூசுகிறார்கள். திருவள்ளுவரும் சிக்கமாட்டார், நானும் சிக்கமாட்டேன்'' என்று பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் இன்னும் வெற்றிடம் உள்ளது, தனது கருத்தில் மாற்றமில்லை என்று ரஜினி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''முதலில் ரஜினி அரசியலுக்கு வரட்டும். அவர் இப்ப நடிகர், நடிகருக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்'' என்று தெரிவித்தார். திமுக தரப்பில் துரைமுருகன் வெற்றிடத்தை நிரப்பும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை வந்த அழகிரியிடம் ரஜினி தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் உள்ளதாக தெரிவித்திருந்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரிடம் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, “அவர் சொல்வது உண்மை. அவ்வளவுதான் சொல்ல முடியும்” என்றார்.
தமிழகத்தில் வெற்றிடத்தை யார் நிரப்புவார்கள் என்று கேட்டதற்கு “ரஜினிகாந்த் வந்து நிரப்புவார்” என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
ரஜினியும் அழகிரியும் நல்ல நண்பர்கள். இருவரும் துக்ளக் ஆசிரியர் மறைந்த ‘சோ'விடம் ஆலோசனை கேட்டு அதன்படி நடந்தவர்கள். இருவரும் 'சோ'வை அதிகம் மதித்தவர்கள். ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பித்தால் திமுகவில் இல்லாத அழகிரி, ரஜினியுடன் சேர வாய்ப்புள்ளது என அவரது ஆதரவாளர்கள் தரப்பில் ஒரு பேச்சு அடிபடுகிறது.