மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக் கில் கைதாகி, நன்னடத்தை விதியில் விடுதலையான நல்லமருது, மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார்.
மதுரையில் கடந்த 1997-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகரைச் சேர்ந்த நல்லமருது உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக் கில் நல்லமருது உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டு, அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 2008 செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, நன்னடத்தை விதிகளின்படி நல்ல மருது விடுதலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந் திரபிதாரி தலைமையிலான தனிப் படையினர் கூறுகையில், ‘‘சிறையி லிருந்து விடுதலையான நல்லமருது மீது ஆட்டோ ஓட்டுநர் பாண்டியராஜன் கொலை வழக்கு அவனியாபுரம் காவல் நிலையத்திலும், குலசேகரபட்டினத் தில் அதிமுக பிரமுகர் ஒருவரை தாக்கியதில் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
நன்னடத்தை விதிகளை மீறிய நல்லமருது குறித்து உள்துறை மூலம் ஆளுநருக்கு சிறப்பு அறிக்கை அளிக்கப்பட்டது. நன்னடத்தை விதியின்கீழ் நல்லமருது விடுதலையான உத்தரவை ஆளுநர் ரோசய்யா ரத்து செய்தார். இதையடுத்து நேற்று அதிகாலையில் நல்லமருது கைது செய்யப்பட்டார்’’ என்றனர்.
நல்லமருது மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் எஸ்.ஆர்.கோபியின் சகோதரர் என்பது குறிப்பிடத் தக்கது.