கோப்புப்படம் 
தமிழகம்

தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைவர்கள் தேர்தல் நாளை தொடங்குகிறது: டிசம்பர் 2-வது வாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் பதவியைப் பிடிக்க 10-க்கும் மேற்பட்டோர் தீவிர முயற்சி

செய்திப்பிரிவு

பாஜக மாவட்டத் தலைவர்கள் தேர்தல் நாளை தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 2-வது வாரத்தில் மாநிலத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. மாநிலத் தலைவர் பதவியைப் பிடிக்க 10-க்கும் மேற்பட்டோர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

பாஜகவில் கட்சி விதிகளின்படி 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும். கிளை கமிட்டி, மண்டல் (ஒன்றியம், நகரம், பேரூராட்சி, மாநகராட்சி மண்டலம்) மாவட்டம், மாநிலம் மற்றும் தேசியத் தலைவர் வரை அனைத்து தலைவர் பதவிகளும் 3 ஆண்டுகளைக் கொண்டது. எனவே, பாஜக உள்கட்சித் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

கடந்த 2015-ல் உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி 2018 டிசம்பரில் உள்கட்சித் தேர்தல் நடந்திருக்க வேண்டும். 2019 ஏப்ரலில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் பாஜகவில் உறுப்பினர் சேர்க்கையும், உள்கட்சித் தேர்தலும் தள்ளிப்போனது.

மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், கடந்த ஜூலை 6-ம் தேதி பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. 3 மாதங்கள் நடந்த இந்தப் பணி முடிவடைந்ததையடுத்து உள்கட்சித் தேர்தல் கடந்த அக்டோபரில் தொடங்கியது. கிளை கமிட்டித் தேர்தல்கள் முடிந்து தற்போது மண்டல் தலைவர் தேர்தல்கள் நடந்து வருகின்றன.

இது தொடர்பாக பாஜக மாநிலஅமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்திடம் கேட்டபோது, "கிளைக் கமிட்டி, மண்டல்தலைவர் தேர்தல்கள் முடிந்த மாவட்டங்களில் மாவட்டத் தலைவர் தேர்தல் நவ.15-ம் தேதி (நாளை)தொடங்கும். வரும் 30-ம் தேதிக்குள் மாவட்டத் தலைவர் தேர்தல்களை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு டிசம்பர் 2-வது வாரத்தில் மாநிலத் தலைவர் தேர்தல் நடைபெறும். அதற்கான தேதி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை" என்றார்.

கடந்த 2014 ஆகஸ்ட் 16-ம் தேதி மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற தமிழிசை சவுந்தரராஜன், கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால், கட்சிப் பதவியை அவர் ராஜினாமா செய்தார். தமிழிசை பதவி விலகி இரண்டரை மாதங்களாகியும் புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப்படவில்லை. எனவே, உறுப்பினர் சேர்க்கை, உள்கட்சித் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட கட்சிப் பணிகள் அனைத்தையும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மேற்கொண்டு வருகிறார்.

டிசம்பர் இறுதியில் பாஜக தேசியத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. எனவே, அதற்கு முன்னதாக மாநிலத் தலைவர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. இதனால், டிசம்பர் முதல் வாரத்தில் மாநிலத் தலைவர் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

பல்வேறு மாவட்டங்களில் கிளைக் கமிட்டி, மண்டல் தலைவர் தேர்தல்கள் தாமதமாகி வருவதால் மாவட்டத் தலைவர் தேர்தலும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநிலத் தலைவர் தேர்தலை டிசம்பர் 2-வது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

கடும் போட்டிமுன்னாள் மாநிலத் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், மாநில துணைத் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், டி.குப்புராமு, மாநிலச் செயலாளர்கள் கே.டி.ராகவன், ஆர்.சீனிவாசன், மாநில செய்தித் தொடர்பாளர் கனகசபாபதி, இளைஞரணி தேசிய துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மாநிலத் தலைவர் பதவியை கைப்பற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், யார் மாநிலத் தலைவர்என்பதை பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் முடிவு செய்வார்கள் என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT