தமிழகம்

கேட்ஜெட்களை ஒரு மணி நேரம் தள்ளிவைத்துவிட்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிட பிரச்சாரம்

செய்திப்பிரிவு

மின்னணு சாதனங்களை ஒரு மணிநேரம் தள்ளிவைத்துவிட்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வலியுறுத்தும் #GadgetFreeHour பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இந்த நூற்றாண்டில நாம் தொழில்நுட்பத்தால்தான் அதிகம் பிணைக்கப்பட்டிருக்கிறோம். இது ஒருபுறம் வளர்ச்சியாக பார்க்கப்பட்டாலும் இன்னொரு பக்கம் எதிர்மறையாக இருக்கிறது. குடும்ப உறவுகள் இதனால் தாக்கத்தை சந்திக்கின்றன.

எனவே, மின்னணு சாதனங்களை ஒரு மணிநேரம் தள்ளி வைத்துவிட்டு குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட வலியுறுத்தும் வகையில் #GadgetFreeHour என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘பேரன்ட் சர்க்கிள்’ என்ற குழந்தை வளர்ப்புத் தளம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இணைந்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறை மூலம் அவை இதில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபல திரையுலகப் பிரபலங்கள், எழுத்தாளர்கள், சாதனையாளர்கள் ஆகியோரும் இந்த பிரச்சாரத்துககு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் ஹயாத், ஹில்டன் ஆகிய பெரிய ஓட்டல் குழுமங்களும், ராம்கோ குழுமம், அப்பல்லோ ஷான் அறக்கட்டளை, விஜிபி மரைன் கிங்டம், லிட்டில் எல்லி, புதிய தலைமுறை தொலைக்காட்சி, டிஜிட்டல் எம்பவர்மென்ட் ஃபவுண்டேஷன் ஆகியவையும் இதில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளன.

#GadgetFreeHour பிரச்சார முயற்சியின்படி இன்று (நவ.14) மாலை 7.30 மணி முதல 8.30 மணி வரை ஒரு மணி நேரம் நாம் அனைவரும் செல்போன்கள் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களையும் அணைத்து வைக்க வேண்டும். அந்த நேரத்தில் குழந்தைகளுடன் விளையாடுதல், சேர்ந்து உணவு அருந்துதல், உரையாடுதல், சிரித்துப் பேசி மகிழ்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

இதில் கலந்துகொண்டு இதற்கான உறுதியேற்க விரும்புவோர் www.gadgetfreehour.com என்ற இணையதளத்தில் அதை மேற்கொள்ளலாம் அல்லது 7230019118 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT