தமிழகம்

கோயம்பேடு சந்தையில் 10 டன் வாழைப்பழம் பறிமுதல்: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

கோயம்பேடு சந்தையில் விதிகளை மீறி பழுக்க வைத்த 10 டன் வாழைப் பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்து அழித்தனர்.

கோயம்பேடு சந்தையில் உணவு பாதுகாப்பு விதிகளை மீறி, வாழைப் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு வருவதாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், அத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் ஏ.ராமகிருஷ்ணன் தலைமையிலான 10 உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கோயம்பேடு சந்தையில் வாழைப் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வரும் 34 கடைகள் மற்றும் கிடங்குகளில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் திடீர் சோதனை நடத்தினர்.

எத்திலீன் தெளிப்பு

அப்போது, 3 கடைகளில் வாழைப் பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பதற்காக எத்திலீனை நேரடியாக வாழைக் காய்கள் மீது தெளித்து பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது உணவு பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது.

இதைத் தொடர்ந்து அந்த 3 கடைகளில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 10 டன் வாழைப் பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கோயம்பேடு சந்தை வளாகத்தில் இயங்கும் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கிடங்கில் கொட்டி அழித்தனர். சில மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

சம்பந்தப்பட்ட கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மேலும் 10 நாட்களுக்கு தொடரும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT