சேலம் நகருக்குள் அதிவேக மாகவும், அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பானை பயன்படுத்தும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலத்தில் பெரும்பாலான சாலைகள் குறுகலாகவே உள்ளன. இதனால், சாலைகளில் எப்போதும் நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் சிரமத்துக்குள்ளாகி வரு கின்றனர். இந்நிலையில், சில தனியார் பேருந்துகள் நகரில் அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன் படுத்தி வருவதால், சாலையில் செல்லும் மக்கள் அச்சமடையும் நிலையுள்ளது.
இந்நிலையில், சேலம் வின்சென்ட் சாலையில் கனகா என்ற பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கன்னங்குறிச்சியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்ற தனியார் பேருந்து காற்று ஒலிப்பானை பயன்படுத்தி அதிக ஒலி எழுப்பியபடி சாலையில் வந்தது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் கனகா தனது இருசக்கர வாகனத்தை சாலையின் ஓரத்துக்கு இயக்கிச் செல்ல முயன்றபோது, தடுமாறி கீழே விழுந்தார்.
இதை கவனித்த அங்கிருந்த பொது மக்கள், கனகாவைமீட்டனர். பின்னர் அதிக சத்தம் எழுப்பியும், அதிக வேகமாகவும் வந்த தனியார் பேருந்தை சிறைபிடித்து, ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த அஸ்தம்பட்டி போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி கூறினர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொது மக்கள் கூறும் போது, “சேலத்தில் இயக்கப்படும் பெரும்பாலான தனியார் பேருந்துகள் அதிக சத்தம் எழுப்பியபடி சாலையில் செல்கின்றன. மேலும், சாலையில் அதிவேகத்தில் செல்வதால் குழந்தை களும் முதியவர்களும் அச்சப்படுகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படுகிறது. இதனைத்தடுக்க, காவல் துறை யினரும், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.