கோவை
கோவையில் அதிமுக கட்சி கொடிக்கம்பம் சாய்ந்ததால், இளம் பெண் விபத்தில் சிக்கியது தொடர்பான கேமரா காட்சிகள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற புகாருக்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை சிங்காநல்லூரை சேர்ந்த நாகநாதன் மகள் ராஜேஸ்வரி என்ற அனுராதா(31). நீலாம்பூர் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
இவர், கடந்த 11-ம் தேதி விமான நிலையத்தில் இருந்து நீலாம்பூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றபோது, கோல்டுவின்ஸ் அருகே விபத்தில் சிக்கினார். பின்னால், வந்த லாரி ஏறியதில் ராஜேஸ்வரியின் கால்கள் நசுங்கின.
மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த வரதராஜபுரத்தை சேர்ந்த விஜயானந்த்(34) என்பவரும் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநர் ராஜபாளையத்தை சேர்ந்த முருகனை கைது செய்தனர்.
படுகாயமடைந்த ராஜேஸ் வரிக்கு தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோல்டுவின்ஸ் அருகே வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக ராஜேஸ்வரியின் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், காவல்துறையினர் இதை மறுத்துள்ளனர். இதற்கிடையே, விபத்து நடந்த பகுதியில் சில இடங்களில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில், கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்ட காட்சிகள் பதிவாகியிருந்ததாகவும் அது சிலரால் அழிக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால், இதையும் காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
திமுக இன்று ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், கொடிக்கம்பம் சாய்ந்து பெண் காயமடைந்ததைக் கண்டித்து கோவையில் இன்று (நவ. 14) திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, வடக்கு மாவட்டச் செயலர் சி.ஆர்.ராமச்சந்திரன், தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராஜேஸ்வரி விபத்தில் சிக்கிய சம்பவத்தில் காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ளாமல், தவறாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததால்தான் பெண் நிலைதடுமாறி விழுந்ததாக மக்கள் கருதுவதால்,விபத்துக்கு காரணமானவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தி இன்று காலை கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன், திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது’ என தெரிவித்துள்ளனர்.