மூன்றாம் பாலினத்தவர்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் போது, தடையாக இருக்கும் விதியை மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலிளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஸ்போர்ட் வாங்குவதற்காக வகுக்கப்பட்ட விதிமுறையில் கடந்த 1980-ம் ஆண்டு பாஸ்போர்ட் விதிகளில் மூன்றாம் பாலினத்தவர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவமனையில் இருந்து பெற்ற சான்றிதழை இணைத்து தான் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை எதிர்த்து சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சிவகுமார் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், “ஒருவர் தன் பாலின அடையாளத்தை கூறுவது என்பது அவரின் தனிப்பட்ட சுதந்திரம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், பாஸ்போர்ட் பெற திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததற்கான சான்றிதழை இணைக்க வேண்டும் என கோருவது சட்டவிரோதம்” என தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது, மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு மனு தொடர்பாக டிசம்பர் 10-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.