டிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா சாலை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நாளை தொடங்குகிறது.
தமிழகத்தில் 18 அரசு மருத் துவக் கல்லூரிகள் மற்றும் 5 மாவட்ட அரசு தலைமை மருத் துவமனைகளில் அரசு செவிலியர் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 2 ஆயிரம் டிப்ளமோ நர்ஸிங் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மொத்தம் 8,182 மாணவிகள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், டிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நாளை (31-ம் தேதி) காலை 9 மணிக்கு தொடங்கி, 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தை பார்த்துக் கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் (டிம்இ) தெரிவித்துள்ளது.
3 ஆண்டாக குறைப்பு
நாடு முழுவதும் உள்ள செவிலியர் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு டிப்ளமோ நர்ஸிங் படிப்பு 3 ஆண்டாக இருந்தது. இந்த 3 ஆண்டுகளிலேயே படிப்பும், பயிற்சியும் ஒருங்கிணைந்து இருந்தன. அதன்பின் 3 ஆண்டு படிப்பு, 6 மாத பயிற்சி என தனித்தனியாக பிரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் படிப்பும், பயிற்சியும் ஒருங்கிணைத்து டிப்ளமோ நர்ஸிங் படிப்பை 3 ஆண்டுகளாக குறைத்து இந்திய நர்ஸிங் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் இருந்து புதிய முறை அமலுக்கு வருகிறது.