மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் 
தமிழகம்

வேலூரில் டெங்கு ஒழிப்பில் மெத்தனம்: 50 தற்காலிக பணியாளர்களை ஒரேநாளில் பணி நீக்கம் செய்து ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவு

ந. சரவணன்

வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக பணியாளர்களை ஒரே நாளில் பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

பருவநிலை மாற்றத்தால் மாநிலம் முழுவதும் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் டெங்கு பாதித்த மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் 3-ம் இடத்தில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு வேலூர் மாவட்டத்தில் அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மாவட்டம் முழுவதும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 480 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, டெங்கு ஒழிப்பு பணிக்காக தற்காலிக பணியாளர்கள் 1,936 தற்காலிக பணியாளர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளை செய்து வந்தனர்.

ஆயிரக்கணக்கான தற்காலிக பணியாளர்களை நியமித்தும் டெங்கு தாக்கம் குறையவில்லை என்றும், தற்காலிக பணியாளர்களின் பணியில் திருப்தி இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை சரியாக செய்யாத தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 50 தற்காலிக பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்புப்பணிகளில் மெத்தனமாக செயல்பட்டு வருவது தெரியவந்தது. இந்த தகவல் ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்புப்பணியில் ஈடுபட்டு வந்த 50 பேரை ஆட்சியர் சண்முகசுந்தரம் பணிநீக்கம் செய்து இன்று (நவ.13) உத்தரவிட்டார். அவர்களுக்கு பதிலாக உடனடியாக புதிய பணியாள்ரகள் நியமிக்கப்பட்டனர்.

ஒரே நாளில் 50 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டெங்கு கொசு புழு ஒழிப்புப்பணியில் சரிவர செயல்படாமல் மெத்தனமாக இருப்பது தெரியவந்தால் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்தார்.

SCROLL FOR NEXT