விடுமுறை நாட்களில் பணிபுரியும் போக்குவரத்து போலீஸார் வழக்கமான சீருடைக்கு பதிலாக டி-ஷர்ட் அணிந்து புதுச்சேரியில் பணிபுரிய உள்ளனர்.
சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று. சுற்றுலா மாநிலங்களில் உள்ள கோவா, மணிப்பூரில் போக்குவரத்து போலீஸாருக்கு தனியாக சீருடை உண்டு. அதை பின்பற்றி புதுச்சேரியிலும் போக்குவரத்து போலீஸாருக்கு தனி சீருடை தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் போக்குவரத்து போலீஸார் தற்போது கடற்படையில் உள்ளது போன்று முழு வெள்ளை நிற சீருடை அணிந்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வெள்ளை சட்டைக்கு பதிலாக கருநீலம் மற்றும் வெள்ளை நிறத்துடன் கூடிய டி-ஷர்ட் அணிய உள்ளனர். இதை அரசு வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக போலீஸாரிடம் விசாரித்தபோது, ”காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை விடுமுறை நாட்களில் இந்த சீருடையை போக்குவரத்து போலீஸார் அணிய வேண்டும். தற்போது இரண்டு செட் சீருடைகள் அனைத்து போக்குவரத்து போலீஸாருக்கும் தரப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளிடம் வித்தியாச உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இது தரப்பட்டுள்ளது," என்றனர்.
செ.ஞானபிரகாஷ்