ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் மற்றும் வணிக வளாக உரிமையாளர் மீது முதன்முறையாக மலக்குழியில் மனிதர்களை பயன்படுத்துவதை தடைச் செய்யும் சட்டப் பிரிவின்கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய தண்டபாணி என்ற ஒப்பந்ததாரர் ஆட்களை அழைத்தார். ஐஸ் ஹவுஸில் வசிக்கும் தொழிலாளர்கள் அருண்குமார், அவரது தம்பி ரஞ்சித் குமார், யுவராஜ், அஜித் குமார், ஸ்ரீநாத் என்ற ஐந்து நபர்களை நேற்று அதிகாலை பணிக்கு தண்டபாணி அழைத்துச் சென்றார்.
வணிக வளாகத்தில் உள்ள கழிவுநீர்த் தொட்டிக்குள் ரஞ்சித் குமார் உள்ளிட்ட இருவர் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மேலே நின்றிருந்த அருண்குமார் அவர்களைக் கைகொடுத்து மேலே தூக்கியுள்ளார். இதில் அவரது சகோதரர் ரஞ்சித் குமார் மயக்கமாக அருண் குமார் அவரைக் காப்பாற்றுவதற்கு கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி காப்பாற்றியபோது விஷவாயு தாக்கியது.
ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அருண்குமார் உயிரிழந்தார்.
கழிவுநீர்த் தொட்டி, மலக்குழிக்குள் இறங்க மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது என தேசிய துப்புரவாளர் ஆணைய விதி உள்ளது. இதைக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களுக்கு துப்புரவாளர் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உயிரிழந்தால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.10 லட்சம் சம்பந்தப்பட்ட உரிமையாளர் அல்லது காண்ட்ராக்டர் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
இந்த விவகாரத்தில் பொதுவாக (அஜாக்கிரதயாக இருந்து உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருத்தல்) ஐபிசி 304(1) பிரிவின் கீழ்தான் போலீஸார் வழக்குப்பதிவு செய்வார்கள்.
ஆனால் இம்முறை மலக்குழி, செப்டிக் டாங் மற்றும் ஆபத்தான விஷவாயு தாக்கும் பணிகளில் தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது என தேசிய துப்புரவாளர் ஆணையம் தெளிவாக வழிகாட்டி உள்ள நிலையில் போலீஸார் கூடுதலாக ஒரு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்னர் சோழிங்க நல்லூரில் நடைபெற்ற சம்பவத்தில் இதே சட்டப்பிரிவின்கீழ் வழக்கு தொடரப்பட்டதாக கூறப்பட்டாலும் அதுகுறித்த தெளிவான விளக்கம் போலீஸாரிடம் இல்லை.
அருண்குமார் உயிரிழப்புக் குறித்து அண்ணா சாலை போலீஸார் ஒப்பந்ததாரர் தண்டபாணி, எக்ஸ்பிரஸ் அவின்யூ உரிமையாளர்கள் மற்றும் சிலர் மீது ஐபிசி பிரிவு 304(1) (அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருத்தல்) மற்றும் prohibition of employment as manual scavengers and their rehabilitation Act 2019 r/w (மனிதக்கழிவுகளைக் அகற்ற மனிதர்களை பயன்படுத்ததடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2019 )-ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் ஒப்பந்ததாரர் தண்டபாணி கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் மீது என்னவகையான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீஸார் சட்ட ஆலோசனை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.