மதுரை
பாலியல் வழக்கில் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முகிலன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பிப்.15 முதல் ஜூலை 6 வரை தலைமைறைவாக இருந்தபோது எங்கு இருந்தீர்கள்? என்பதை தெரிவித்தால் ஜாமீன் வழங்க பரிசீலிப்பதாக முகிலனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே முகிலனுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபித்து அவர் மீது பாலியல் புகார் அளித்த பெண் தனியாக மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, முகிலன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பதில் மனுவில் இடம்பெற்றிருந்த பரபரப்பு தகவல்கள்..
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 15.2.2019-ல் வீடியோ வெளியிட்டேன். பின்னர் மடிப்பாக்கத்தில் உமர் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு எழும்பூர் ரயில் நிலையம் சென்றேன். அங்கு நான் மதுரை செல்லவும், நண்பர் பொன்னரசுக்கு கரூர் செல்லவும் டிக்கெட் எடுத்தோம். நான் மதுரை செல்லும் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறினேன்.
ரயில் செங்கல்பட்டு வரும் வரை செல்போனில் முகநூல் பார்த்தேன். பின்னர் தூங்கிவிட்டேன். கண் விழித்து பார்த்த போது என் கண்களில் துணி கட்டப்பட்டிருந்தது. காரில் போய் கொண்டிருந்தேன். என்னுடன் இருவர் இருந்தனர்.
அவர்களிடம் நீங்கள் யார்? என்னை எங்கு அழைத்து செல்கிறீர்கள்? எனக்கேட்டேன். அவர்கள் என்னை கடுமையாக தாக்கினர். அப்போது தான் நான் கடத்தப்பட்டிருப்பதை தெரிந்து கொண்டேன். அவர்கள் பேசிய மொழி எனக்குப் புரியவில்லை. பின்னர் என்னை ஒரு கட்டிடத்தின் மாடிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த இருட்டு அறையில் அடைத்து வைத்தனர். தினமும் இரு வேளை மட்டும் உணவு தந்தனர். அப்போது மட்டும் கதவை திறந்தனர்.
அந்த அறைக்குள் வைத்து என்னிடம் சிலர் வேறு எந்த பிரச்சினைக்காகவும் போராடுங்கள், ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது. மீறி போராடினால் குடும்பத்தை காலி செய்வோம் என மிரட்டினர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றேன். அதை கண்டுபிடித்துவிட்ட அவர்ககள் என்னை கடுமையாக தாக்கினர். இதனால் என் கண்களில் காயம் ஏற்பட்டது. பின்னர் என்னை கட்டாயப்படுத்தி தொடர்ந்து போதை ஊசி போட்டனர். இதனால் எனக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. நினைவிழந்த நிலைக்கு தள்ளப்பட்டேன்.
பின்னர் லாரி ஒன்றில் ஏற்றி ஒரு கிராமத்தில் இறக்கிவிட்டனர். அங்கு ஒரு மரத்தடியில் மயங்கிய நிலையில் நீண்ட நேரம் கிடந்துள்ளேன். அங்கிருந்த நாடோடி குழுவினர் என்னை மீ்ட்டனர். எனக்கு சில மருந்துகள் அளித்தனர். 2 மாதம் நான் அவர்களுடன் இருந்தேன். பின்னர் நான் ஜார்க்கண்டில் இருப்பதை தெரிந்து கொண்டேன்.
அடுத்து அவர்கள் பிஹார் செல்ல திட்டமிட்டிருந்ததையும் தெரிந்துகொண்டேன். பின்னர் ஆந்திரா வழியாக சென்ற ரயிலில் அழைத்துச் சென்றனர். அந்த ரயில் விசாகபட்டனம், குண்ட்கல், விஜயவாடா, ஆனந்தப்பூர் வழியாக சென்றது. திருப்பதி வந்ததும் நான் இறங்கி திருப்பதி ரயில் நிலையத்தை அடைந்தேன். அங்கு புறப்படத் தயாராக இருந்த ரயில் தமிழகத்துக்கு செல்வதை தெரிந்து அதன் முன்பு நின்று கோஷம் எழுப்பினேன்.
என்னை ஆந்திரா போலீஸார் கைது செய்து தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். சென்னை நீதிமன்றத்திலும், பின்னர் கரூர் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டேன். அப்போது இந்த விபரங்களை நீதித்துறை நடுவரிடம் தெரிவித்தேன். ஆனால் நீதித்துறை நடுவர் பதிவு செய்ய மறுத்துவிட்டார்.
இவ்வாறு முகிலன் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. முகிலனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, அவர் சிபிசிஐடி போலீஸ் முன்பு 3 நாளுக்கு ஒரு முறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார்.