ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும் என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "மிக விரைவில் தமிழக முதல்வர் அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிட்டு விநியோகிக்கப்படும்" எனப் பதிவிட்டுள்ளார்.
உடனே வரவேற்ற பாஜக..
அமைச்சரின் இந்த ட்வீட்டை உடனே வரவேற்று ட்வீட் பதிவு செய்தார் தமிழக பாஜகவின் ஐடி பிரிவு மாநிலத் தலைவர் நிர்மல்குமார்.
அவர் தனது ட்வீட்டில் "திருக்குறளை ஆவின் பால் பைகளில் அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு இல்லங்களிலும் திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சடித்து விநியோகம் செய்ய வேண்டும் என நிர்மல் குமார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கடிதம் மூலம் கேட்டு கொண்டிருந்தார்.
கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக திருவள்ளுவரின் உண்மை வரலாற்றை மறைத்து தமிழர்களுக்கு திமுக பெரும் துரோகம் இழைத்துள்ளதாகவும், திருக்குறளையும், தமிழ் மொழியையும் தி.மு.க.வினர் தங்கள் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தினர் எனவும் நிர்மல் குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடி தமிழ் மொழி மற்றும் திருக்குறளை உலக அரங்கில் அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்து சென்று தமிழுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.திருக்குறளை மக்கள் மத்தியில் எளிமையாக கொண்டு சேர்க்க பா.ஜ.க. பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதன்படி ஆவின் பால் பைகளில் திருக்குறளை அச்சடித்து விநியோகம் செய்வதன் மூலம் ஒவ்வொரு இல்லத்திற்கும் திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும் என்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அக்கோரிக்கையை ஏற்கும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட் செய்திருப்பது கவனிக்கத்தக்கது.
நெட்டிசன்களின் எதிர்வினை..
அமைச்சரின் ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் வரவேற்றும், எதிர் கேள்வி எழுப்பியும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில பின்வருமாறு,,
விவேக்ராஜன்:
தமிழ் நாட்டிலிருந்து போகின்ற அனைத்து ரயில்களிலும் திருக்குறளை ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் எழுதி அனுப்ப வேண்டும். இந்தியர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும். செய்வீர்களா.. அப்பறமா ஃப்ளைட்டுக்கு வருவோம்.
ஏழுமலை லோகநாதன்:
அமைச்சரே! திருக்குறள் ஆவின் பால் பையில் அச்சிடுவது இருக்கட்டும், அரசு பேருந்துகளில் இருந்ததை நீக்கியிருக்கிறீர்கள் முதலில் அதை சரி செய்யுங்கள்...
ராமச்சந்திர சேகரன்:
அவர் செய்யும் செயல் அனைத்தையும் வெறுக்காமல் நன்மைகளையும் பாராட்ட வேண்டாமா? முப்பாலையும் ஆவின் பால் பாகட்டில் அச்சிட்டு தன் பால் ஈர்க்கும் அவர் செயல் நன்மைத் தானே..
த.திருநாவுக்கரசு:
பள்ளிகள், மாநகர சுவர்களில், பேருந்து நிறுத்த நிழற்குடை இப்படியான அனைத்து வாய்ப்புள்ள இடங்களிலும் குறளை எழுதச்சொல்லி ஆணையிடுங்கள் வாழ்த்துவோம்!!