மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் தலைமைச் செயலர் கே.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது, ஜவுளித்துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய அமைச்சரிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார். இதில், ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைத்தல், ஜவுளி வர்த்தகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
தொடர்ந்து, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் நிலவரம், அக்குற்றங்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்தினார். மேலும், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதித்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.