‘நான்தான் சிறந்த டாக்டர்’ என்று ஆன்லைனில் விளம்பரம் செய்த 6 டாக்டர்களின் உரிமத்தை 3 மாதங்களுக்கு ரத்து செய்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் கவுன்சில் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.வி.எஸ்.சுரேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:உலக சுகாதார நிறுவன அமைப்பு அறிவிப்பின்படி 1,000 பேருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும்.
இந்தியாவில் தற்போது 1,300 பேருக்கு ஒரு டாக்டரும், தமிழகத்தில் 750 பேருக்கு ஒரு டாக்டரும் உள்ளனர். இன்னும் 10 ஆண்டுகளில் 500 பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலை வந்துவிடும். தற்போது தமிழகத்தில் 1.20 லட்சம் டாக்டர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் புதிதாக 8,580 டாக்டர்கள் வருகின்றனர்.
இன்னும் சில ஆண்டுகளில் மருத்துவத் துறையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை உருவாகும். அதனால், புதிய மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்துக்கு இனி தேவையில்லை. மருத்துவ மேற்படிப்புகளின் தரத்தையும், மருத்துவமனைகளின் தரத்தையும் உயர்த்துவதற்கு இருக்கக் கூடிய நிதியை செலவு செய்ய வேண்டும்.
மருத்துவத் துறையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தற்போதைய சூழலில் மருத்துவம் படிப்பது என்பது ஒரு சமூக அந்தஸ்தாக மாறிவிட்டது. சேவை மனப்பான்மையுடன் இருக்கும் மாணவர்களை மட்டும் படிக்க வையுங்கள். பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கவுன்சில் தலைவர் டாக்டர் கே.செந்தில் கூறியதாவது:தமிழகத்தில் இன்னும் 10 ஆண்டுகளில் டாக்டர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிடும். தற்போதுள்ள டாக்டர்களை கிராமங்களுக்குச் சென்று பணியாற்ற வைக்க வேண்டும். இதுதொடர்பான தீர்மானம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மகப்பேறு மருத்துவம், மயக்கவியல், குழந்தைகள் மருத்துவம், இதய சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, இரைப்பை குடல் சிகிச்சை போன்ற துறைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. ஏஜென்சிகளிடம் பணம் கொடுத்து ‘நான்தான் சிறந்த டாக்டர்’ என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஆன்லைனில் சுய விளம்பரம் செய்து வருகின்றனர்.
இதில் முதல்முறையாக விளம்பரம் செய்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலமுறை எச்சரித்தும் கேட்காத 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கவுன்சிலில் இருந்து 6 பேரின் உரிமமும் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 3 மாதங்களுக்கு எங்கும் டாக்டராக பணியாற்ற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.