கம்போடியா நாட்டில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்களை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கம்போடியா நாட்டில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு கப்பலில் ஒரு கன்டெய்னர் கொண்டுவரப்பட்டது. ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் மட்கிப் போகும் பிளேட்கள் இருப்பதாக அந்த கன்டெய்னரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. வெளிநாடுகளில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டு, சென்னை துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர்களை, வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை செய்தனர்.
அப்போது, கம்போடியா நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கன்டெய்னரில் இருந்த அட்டைப் பெட்டிகளில் சிகரெட் கார்ட்டூன்கள் வரையப்பட்டிருந்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அட்டைப் பெட்டிகளை திறந்து பார்த்தனர். அவை அனைத்திலும் சிகரெட் பாக்கெட்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மொத்தம் 50 லட்சம் வெளிநாட்டு சிகரெட்கள் அதில் இருந்தன. இதன் இந்திய மதிப்பு ரூ.7 கோடி ஆகும். கம்போடியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த சிகரெட்களை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்டெய்னர்களை வரவழைத்தவர்கள் மற்றும் சிகரெட் கடத்தியவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.