நெடுஞ்சாலைத் துறைக்கு வழங்கப்பட்ட ரூ.5,000 கோடியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சேலம் ஓமலூரில் இன்று (நவ.12) முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அமமுகவில் இருந்து அதிமுகவில் வேறு யாரும் இணைவதற்குப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களா?
பல பேர் பேசிக்கொண்டிருக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் இன்றைக்கும் அமமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்திருக்கின்றனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அமமுகவினர் அதிமுகவில் இணைந்து கொண்டிருக்கின்றனர்.
அதிமுகவின் ஸ்லீப்பர் செல்லாக பழனியப்பன் அமமுகவில் இருப்பதாக தினகரன் கூறியிருக்கிறாரே?
அமமுகவை ஒரு கட்சியாகவே நான் நினைக்கவில்லை. அமமுகவுக்கு கட்சி அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா? இன்னும் அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. அதனால் அவரைப் பொருட்படுத்தத் தேவையில்லை. அவர் வேறு கட்சிக்குச் செல்வதற்கு பல கட்சிகளுக்கு தூதுவிடுவதாகக் கேள்விப்பட்டேன். அதிமுகவுக்கு வருவதற்கும் தூது விட்டதாக கேள்விப்பட்டேன். அப்படிப்பட்ட ஆட்களுக்கு இங்கு இடம் இல்லை.
நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது என உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறதே?
நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு செய்தியை நான் இங்கே விமர்சிக்க விரும்பவில்லை.
தேனி எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத் குமார் தான் மோடி நாட்டிலிருந்து வந்திருப்பதாக அமெரிக்காவில் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவைக் குறிப்பிடவில்லையே?
அவர் கருத்தைச் சொல்லியிருக்கிறார். நாடு என்பது வேறு, மாநிலம் என்பது வேறு. வெளிநாட்டுக்குச் சென்றிருப்பதால், தன் நாட்டை முன்னிறுத்திச் சொல்லியிருக்கிறார்.
நெடுஞ்சாலைத் துறைக்கு வழங்கப்பட்ட ரூ.5,000 கோடியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
சேலம்-சென்னை எட்டு வழிச் சாலைக்கு நிலம் எடுக்கக்கூடாது என்றனர். இது தொற்று நோய் போன்று பரவி எங்கும் நிலம் எடுக்க முடியாத நிலை வந்துவிட்டது. சாலை விரிவுபடுத்துவதற்கும் நிலம் எடுக்க முடியவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் நிலம் கையகப்படுத்தி மத்திய அரசுக்குக் கொடுத்தால்தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஆனால், கையகப்படுத்தும்போதே சிலர் போராட்டம் நடத்துகின்றனர். நீதிமன்றத்திற்குச் செல்கின்றனர். அதற்கு சில அரசியல் கட்சிகள் துணை நிற்கின்றன.
பொதுமக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். மின்சார டவர் அமைப்பதற்காகக் கூட நிலம் கையகப்படுத்த முடியவில்லை. இவற்றுக்கு ஒத்துழைத்தால் தான் தடையில்லா மின்சாரம் வழங்க முடியும். மத்திய அரசு அனுமதி அளித்து, முதற்கட்டமாக நான்கு சாலைகளை விரிவுபடுத்துவதற்கு நிலம் கையகப்படுத்தினோம். ஆனால், பெரும்பாலான இடங்களில் நிலம் எடுக்க முடியவில்லை. மக்களின் ஆதரவுடன் நிலம் கையகப்படுத்தப்பட்டு அங்கு விரைவில் பணிகள் நடக்க அரசு துணை நிற்கும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.