சென்னை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி மயக்கமான தம்பியைக் காப்பாற்றிய அண்ணன் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய தண்டபாணி என்பவர் ஆட்களை அழைத்தார். ஐஸ் ஹவுஸில் வசிக்கும் தொழிலாளர்கள் அருண்குமார், அவரது தம்பி ரஞ்சித் குமார், யுவராஜ், அஜித் குமார், ஸ்ரீநாத் என்ற ஐந்து நபர்களை இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் தண்டபாணி அழைத்துச் சென்றார்.
வணிக வளாகத்தில் உள்ள கழிவுநீர்த் தொட்டிக்குள் ரஞ்சித் குமார் உள்ளிட்ட இருவர் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மற்றவர்கள் கூச்சலிட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து மேலே நின்றிருந்த அருண்குமார் அவர்களைக் கைகொடுத்து மேலே தூக்கியுள்ளார். இதில் அவரது சகோதரர் ரஞ்சித் குமார் மயக்கமாக அருண் குமார் அவரைக் காப்பாற்றுவதற்கு கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி மேலே தூக்கி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் விஷவாயு தாக்கியதால் அருண்குமார் உள்ளே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அருண்குமாரை மீட்ட சக தொழிலாளிகள் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அருண்குமார் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்தது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழிவுநீர்த் தொட்டி, மலக்குழிக்குள் இறங்க மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது என தேசிய துப்புரவாளர் ஆணைய விதி உள்ளது. இதைக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களுக்கு துப்புரவாளர் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உயிரிழந்தால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.10 லட்சம் சம்பந்தப்பட்ட உரிமையாளர் அல்லது காண்ட்ராக்டர் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.