கோவை
தமிழக ஆளுமையில் வெற்றிடம் எதுவும் இல்லை. ரஜினியின் கருத்து குறித்து கவலைப்பட அவர் என்ன அரசியல் கட்சித் தலைவரா? அவர் ஒரு நடிகர் மட்டுமே. எனவே, அவரது கருத்து குறித்து கவலைப்படத் தேவையில்லை' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதே, தமிழகத்தில் எந்த வெற்றிடமும் இல்லை என்பதை நிரூபித்துள்ளது.
அமமுக செய்தி தொடர்பாளராக இருந்த வா.புகழேந்தி, அதிமுகவில் இணைவது தொடர்பாக கடிதம் கொடுத்தால், தலைமைக் கழக நிர்வாகிகள் அதை பரிசீலித்து முடிவு எடுப்பார்கள்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் எப்போது என்பதை, தன்னாட்சி அமைப்பான மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும். குறித்த காலத்தில் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். ஏற்கெனவே மக்களவைத் தேர்தலின்போது அமைக்கப்பட்ட கூட்டணி, உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். இதில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்.
ரஜினி என்ன தலைவரா?
தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்களுக்கு வெற்றிடம் இருப்பதாக, அரசியல் கட்சித் தலைவர்கள் யாராவது பேசினால் கவலைப்படலாம். அரசியல் கட்சியினர் யாரும் இதுபோன்ற கருத்தை தெரிவிக்கவில்லை. ரஜினி என்ன தலைவரா? அல்லது கட்சியைத் தொடங்கியுள்ளாரா? அவர் ஒரு நடிகர். அவ்வளவுதான். அதனால் அவரது கருத்து குறித்து கவலைப்படத் தேவையில்லை.
இது தொடர்பாக பல மேடைகளில் விளக்கிப் பேசியுள்ளேன். ஆனாலும், ஊடகத்தினர் பரபரப்புக்காக ரஜினியிடம் எதையாவது கேட்பதும், அவர் இவ்வாறு கூறுவதும் தொடர்கிறது. பத்திரிகை, ஊடகங்களில் இதை பெரிதுபடுத்துகிறார்கள். அவ்வளவுதான்.
சென்னையில் காற்று மாசு பிரச்சினை தொடர்பாக வருவாய்த் துறை அமைச்சர் ஏற்கெனவே பதில் அளித்துவிட்டார். மாமல்லபுரத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேம்படுத்தி, தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.