சென்னை
புராதன நகரமான மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தொல்லியல் சிறப்பு வாய்ந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் கலை பொக்கிஷமான மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும் எனக் கோரி கடந்த நவ.1-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரிக்கு நீதிபதி என்.கிருபாகரன் கடிதம் எழுதியிருந்தார்.
அதில் கூறியிருந்ததாவது:பல்லவர் காலத்தில் முக்கிய கடற்கரை நகரமாக மாமல்லபுரம் விளங்கியுள்ளது. தமிழர்களின் தொன்மை மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் மாமல்லபுரமும் ஒன்று. சமீபத்தில் இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபரின் சந்திப்பு இங்கு நடந்தது என்பதால் மாமல்லபுரத்தில் இருந்த கலைநயமிக்க கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு மற்றும் வெண்ணை உருண்டை பாறை, மண்டபங்கள் என அனைத்து இடங்களும் புதுப்பொலிவு பெற்றது.
தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் சமீபத்தில்கூட கீழடி அகழாய்வு சாட்சியாக அமைந்துள்ளது. மாமல்லபுரத்தை கலாச்சார சின்னமாக யுனெஸ்கோவும் அங்கீகரித்துள்ளது. மாமல்லபுரம், கீழடி தவிர்த்து ஆதிச்சநல்லூர், சமணர் படுகை, கோயில் நகரங்களான மதுரை, சிதம்பரம், தஞ்சாவூர் என பல இடங்கள் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக விளங்குகின்றன. இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் சுற்றுலாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
விரும்பத்தகாத சம்பவங்களின் காரணமாக இந்தியாவுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் சகிதம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். இந்தோனேஷியா, ஜாவா, பாலி போன்ற சுற்றுலா மட்டுமே பிரதான வருவாய் மூலங்களாக கொண்டுள்ளன. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்த வேண்டும்.
இந்திய பிரதமர், சீன அதிபர் சந்திப்பின்போது கம்பீரமாக பளிச்சென காட்சியளித்த மாமல்லபுரம் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. எனவே, மாமல்லபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிரந்தரமாக பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். ஆக்கிரமிப்புகள் மீண்டும் பெருகவிடக் கூடாது. கடற்கரைகோயில் போன்ற கலாச்சாரங்களை சிதைக்கும் வகையில் கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. அங்கு குப்பை போட்டு அசுத்தம் செய்தால் குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்க வேண்டும்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஆங்கில புலமை பெற்ற சுற்றுலா வழிகாட்டி குழுக்களை அமைக்க வேண்டும். அத்துடன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சுத்தமான, சுகாதாரமான உணவு, குடிநீர் மற்றும் கலாச்சார பெருமையைப் போற்றும் வகையில் இசை, நடனம் ஆகியவற்றுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். அங்குள்ள புராதன சின்னங்களின் பெருமைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை வேண்டும். முக்கிய இடங்களை மின்னொளியில் காட்சிப்படுத்த வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.
இந்த கடிதத்தை தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத்கோத்தாரி, சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘தமிழகத்தின் பெருமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
எனவே, மாமல்லபுரத்தின் கலைநயம், அழகு மற்றும்புராதனச் சின்னங்களை நிரந்தரமாக பாதுகாக்க மத்திய, மாநிலஅரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைஎன்ன என்பது குறித்தும், ஒதுக்கியுள்ள, ஒதுக்கப்படவுள்ள நிதிஆதாரம் குறித்தும் 4 வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் புகைப்பட ஆதாரங்களுடன் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை டிச.11-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.