கோப்புப்படம் 
தமிழகம்

மண்டல பூஜைக்காக நவ.16-ல் சபரிமலை நடைதிறப்பு: 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடக்கும்

செய்திப்பிரிவு

என்.கணேஷ்ராஜ்

தேனி

சபரிமலையில் மண்டல பூஜைக்காக நவ.16-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத இறுதி நாளில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து 5 நாட்கள் வழிபாடு நடைபெறும். இதுதவிர மண்டல பூஜை, மகரவிளக்கு, பங்குனி உத்திரம், சித்திரை விசு, பிரதிஷ்டை தினம், ஓணம், சித்திரை ஆட்டம் உள்ளிட்ட தினங்களில் வழிபாடுகள் நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு மண்டல பூஜைக்கான நடை திறப்பு வரும் 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு தொடங்க உள்ளது. அன்று மாலை தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு தலைமையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்து வழிபாடுகளை மேற்கொள்வார்.

ஐயப்பன் மேல் சாத்தப்பட்ட விபூதி பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். மேல்சாந்தியின் பதவிக்காலம் அன்றுடன் முடிவடைவதால் புதிதாக தேர்வான மேல்சாந்தி சுதிர் நம்பூதிரியிடம் கோயில் சாவி ஒப்படைக்கப்படும். அவர் தலைமையில் பூஜைகள் நடைபெறும். பொறுப்பு முடிந்த மேல்சாந்தி அன்றிரவு கோயிலில் இருந்து ஊர் திரும்பிவிடுவார்.

மறுநாள் காலை கார்த்திகை முதல் தேதியில் இருந்து 41 நாட்களுக்கும் தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதிகாலையில் நிர்மால்ய பூஜை, சந்தன, நெய் அபிஷேகம் லட்சார்ச்சனை, படிபூஜை உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும். மண்டல பூஜை டிச.27-ம் தேதி நடைபெறும்.

SCROLL FOR NEXT