கோவை
கோவை அவிநாசி சாலை, கோல்டுவின்ஸ் அருகே, இருசக்கர வாகனங்களின் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.
சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (எ) அனுராதா (30). இவர் நீலாம்பூர் அருகேயுள்ள நட்சத்திர ஓட்டலில், கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் விமான நிலைய சந்திப்பில் இருந்து நீலாம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கோல்டுவின்ஸ் அருகே சென்ற போது இடையூறு காரணமாக ராஜேஸ்வரி திடீரென பிரேக் போட்டாராம். அப்போது, வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. அப்போது பின்னால் வந்த லாரி ராஜேஸ்வரியின் கால்கள் மீது ஏறி நசுக்கின. பின்னர், அந்த லாரிவலது புறம் ஏறி, அருகே நித்யானந்தம் (30) என்பவர் ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் ராஜேஸ்வரி படுகாயமடைந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நித்யானந்தம் லேசான காயங்களுடன் தப்பினார்.
இது தொடர்பாக, ராஜேஸ்வரியின் உறவினர் சிவன் கூறும்போது, ‘‘சாலையில் வைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடிக்கம்பம் சாய்ந்ததால், அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி பிரேக் போட்டுள்ளார். அப்போது கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி ஏறியதில் அவரது கால்கள் நசுங்கின. இந்த சம்பவத்துக்கு பின்னர் அந்த பகுதியில் சில மீட்டர் தூரத்துக்கு பொருத்தப்பட்டிருந்த கொடிக் கம்பங்கள் உடனடியாக அகற்றப்பட்டன’’ என்றார்.
மாநகரப் போக்குவரத்து புலனாய்வு கிழக்குப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘விபத்து நடந்தது உண்மை. ஆனால், கட்சிக் கொடிக்கம்பம் சாய்ந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக கூறுவது தவறான தகவல். இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.