மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சட்டப்பேரவை. (கோப்பு படம்) 
தமிழகம்

ஆண்டுதோறும் சிலைகள், கட்டிடங்களுக்கு அலங்கார விளக்குகள் அமைக்க புதுவையில் கோடிக்கணக்கில் செலவு: நிதி சூழலை கருத்தில் கொண்டு தவிர்க்கப்படுமா?

செய்திப்பிரிவு

புதுச்சேரி 

சிலைகளுக்கு அலங்கார விளக்கு கள் அமைக்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது. நிதி சூழலை கருத்தில் கொண்டு இதை தவிர்க்கு மாறு முதல்வர், ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழா, புதுச்சேரி விடுதலை நாள் ஆகிய விழாக்களின்போது நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள 29 தலைவர்கள் சிலைகள், ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவை மின்விளக்குகளால் அலங் கரிக்கப்படுகின்றன.

இதற்கான செலவினங்கள் தொடர்பாக ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டு பெற்றுள் ளார். இதுதொடர்பாக முதல்வர், ஆளுரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த மனு விவரம்

புதுச்சேரியில் 3 விழாக்களுக்கு அலங்கார விளக்குகள் அமைக்கப்படுகின்றன. சுதந்திர தின விழாவுக்காக என எடுத்துக் கொண்டால் 29 சிலைகளை மின்விளக்குகளால் அலங்கரிக்க ரூ. 5.45 லட்சம், புதுச்சேரி நுழைவாயில்களை அலங்கரிக்க ரூ. 2.04 லட்சம், ஆளுநர் மாளிகையை அலங்கரிக்க ரூ. 6 லட்சம், சட்டப் பேரவையை அலங்கரிக்க ரூ. 8.5 லட்சம், தலைமை செயலகத்தை அலங்கரிக்க ரூ. 6 லட்சம் என பல வகைகளில் ஒரு விழாவுக்காக ரூ. 29.5 லட்சம் வரை செலவிடப் படுவதாக தகவல் தந்துள்ளனர். 3 விழாக்களுக்கு ரூ. 88.51 லட்சம் செலவாகிறது.

அத்துடன் தலைவர்களின் சிலை களுக்கு பிறந்த நாள், நினைவு நாள் அன்று மாலை அணிவிக்கவும், மின் விளக்கு அலங்காரத்துக்கும் மொத்தம் ஆண்டுக்கு ரூ. 8.75 லட்சம் செலவாகிறது. மொத்தமாக சிலைகளை அலங்கரிக்க அலங்கார விளக்குகளுக்கு ரூ. 97.27 லட்சம் செலவாகிறது. அத்துடன் மின்கட்டணம் இதற்கு தனியாக பல லட்சம் செலவாகிறது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது.

புதுச்சேரியில் கடும் நிதி நெருக்கடி நிலவுவதால் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பத்தாயிரம் பேர் பல மாதங்களாக ஊதியம் இல்லாத சூழலில் உள்ளனர். அத்துடன் ரேஷனில் 52 சதவீதம் மக்கள் சிவப்பு அட்டை ரேஷன் கொண்ட வறுமை சூழலில் உள்ளவர்களாக உள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் அரிசி தரப்படுவதில்லை. நிதி நிலையை கருத்தில் கொண்டு ஆடம்பர அலங்கார செலவுகளை தவிர்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மோசமான நிலையில் ஆயி மண்டபம்

புதுச்சேரி சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை எதிரே அரசின் சின்னமான ஆயி மண்டபம் உள்ளது. மக்களுக்காக தனது மண்டபத்தை இடித்து குளத்தை வெட்டிய ஆயி நினைவாக இம்மண்டபம் உள்ளது. தற்போது இம்மண்டபம் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ள சூழலில் அதை சுற்றி மின்விளக்குகள் அமைக்கலாமா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

SCROLL FOR NEXT