முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணைய வரலாற்றில் சிறப்பாகச் செயல்பட்டவருமான மகசேசே விருது பெற்ற டி.என்.சேஷன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87.
அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக:
இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், திடீரென மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டுப் பெரிதும் வேதனையுற்றேன். டி.என்.சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது, முழுமையாகத் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக தேர்தல் ஆணையம் கம்பீரமாகத் திகழ்ந்தது. டி.என்.சேஷன், நேர்மை, கண்டிப்பு, நடுநிலை ஆகியவற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் என்றால், அது மிகையல்ல. சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு, தமது அதிகாரம் முழுவதையும் பயன்படுத்தி, தேர்தல் ஜனநாயகம் என்ற தீபத்தைப் பிரகாசிக்கச் செய்த டி.என்.சேஷன், இன்றைக்கு நம்மிடையே இல்லை.
ராமதாஸ், நிறுவனர், பாமக:
இந்தியாவின் தேர்தல் வரலாற்றை டி.என்.சேஷன் பங்களிப்பைக் குறிப்பிடாமல் பதிவு செய்ய முடியாது. இந்தியாவில் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதுபற்றி மக்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் எவ்வளவு என்பதை இந்தியாவுக்கு உணர்த்தியவர் சேஷன். இந்தியத் தேர்தல் முறையில் மலிந்து கிடந்த முறைகேடுகளைக் களைந்து, வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்தியவர். அதற்காக டி.என். சேஷனுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருக்கும்.
டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக
இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். தமிழக மற்றும் மத்திய அரசுத் துறைகளில் உயர் பொறுப்புகளை வகித்த அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்
முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. இவர் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்த காலத்தில் தான் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கியது. குறிப்பாக தேர்தல் விதிகளில் முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி, சீர்திருத்தப் பணிகளில் கண்டிப்போடு செயல்பட்டவர். நாட்டு மக்கள் நலன் காக்க உள்ளாட்சித் தேர்தல், மத்திய, மாநில அரசுகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகிய தேர்தல்களில் நேர்மையான சரியான நடவடிக்கைகளை எடுத்தால் தான் நாட்டுக்கு நல்லது என்பதை உணர்ந்தவர். அதன் அடிப்படையிலேயே நேர்மையாக, முறையாக தேர்தல் விதிமுறைகளை முழுமையாகக் கடைபிடித்து தேர்தலை நடத்தியவர்.
இவ்வாறு இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.