கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரே மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் கிராம மக்கள். 
தமிழகம்

கள்ளக்குறிச்சியில் வாகனத் தணிக்கையின்போது நிற்காமல் சென்ற இளைஞர்; பைக் மீது காவலர் லத்தியை வீசியதால் தாய் உயிரிழப்பு: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் விபத்து என போலீஸ் விளக்கம்

செய்திப்பிரிவு

விருத்தாசலம்

கள்ளக்குறிச்சியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது காவலர் ஒருவர் லத்தியை வீசியதால் பின்னால் அமர்ந்து சென்ற அவரதுதாயார் கீழே விழுந்து உயிரிழந்தார். இதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். எனினும், சம்பந்தப்பட்ட இளைஞர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால்தான் விபத்து நிகழ்ந்தது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் தீயணைப்புத்துறை அலுவலகம் அருகே கள்ளக்குறிச்சி போலீஸார் நேற்று மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(23) என்பவர் தனது தாயார் ஐயம்மாளுடன் (63) கச்சிராயபாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

செந்தில்குமார் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அவரை போலீஸார் மறித்தனர். ஆனால் அவர் நிற்காமல் சென்றுள்ளார். இதையடுத்து தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் லத்தியை வீசியதாக தெரிகிறது. இதில் ஐயம்மாள் மீது லத்தி பட்டு நிலை தடுமாறி இருவரும் இருசக்கர வாகனத்துடன் கீழேவிழுந்துள்ளனர். இதில் காயமடைந்த ஐயம்மாளை போலீஸார் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையறிந்த அவரது உறவினர்கள் காவலரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் சம்பவஇடத்துக்குச் சென்று மறியலில்ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதுதொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, “போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே பைக்கில்வந்த செந்தில்குமாரை மறித்துள்ளனர். ஆனால் அவர் மது போதையில் இருந்ததால் வாகனத்தை நிறுத்த முடியாமல் தடுமாறினார். அதனால் அவருடன் வந்த அவரதுதாயார் தவறி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதுஅவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். செந்தில்குமாரைகைது செய்துள்ளோம்” என்றனர்.

ஆயுதப்படைக்கு மாற்றம்

இதுகுறித்து எஸ்பி ஜெயக்குமார் விசாரணை நடத்தி பயிற்சி எஸ்ஐ வேல்முருகன், எஸ்எஸ்ஐ மணி, காவலர்கள் இளையராஜா, செல்வம், சந்தோஷ்குமார் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தர விட்டார்.

SCROLL FOR NEXT