பெ. ஜேம்ஸ்குமார்
செங்கல்பட்டு
இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் மாநில அளவில் அனைத்து பேரூராட்சி, ஊராட்சிகளில் ரூ.64.35கோடி மதிப்பில் அம்மா விளை யாட்டு மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக தொடங்கி உள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 56 லட்சத்து, 55 ஆயிரத்து, 628 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால், விளையாட்டுத் துறையில் அரசுப் பள்ளி மாணவர்களின் முன்னேற்றம் தடைப்பட்டு வருகிறது.
இதேபோல், கிராமப்புற இளைஞர்களும் விளையாட்டுப் பயிற்சி பெறுவதற்கு பெரும்பாலான ஊராட்சிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. இதையடுத்து கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் விளையாட்டுத் துறைகளில் சாதிக்க அனைத்து ஊராட்சிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகம்முழுவதும் உள்ள, 528 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகளில் அரசு சார்பில் ரூ. 64.35 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக அனைத்து பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கபடி, கைப்பந்து, கிரிக்கெட், பால் பேட்மிண்டன் மைதானங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதற்கு தேவையான நிலம்தேர்வு செய்து அறிக்கை அளிக்கஅனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள, 17 பேரூராட்சிகள், 633 ஊராட்சிகளில் மைதானங்கள் அமைக்கத் தேவையான நிலம் தேர்வு செய்ய மாவட்ட விளையாட்டு அலுவலர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: கிராம பகுதிகளிலும் இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற நோக்குடன், முதல்வர் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளிலும் அம்மா விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை ௭டுக்கப்படுகிறது.
அதன்படி அனைத்து பகுதிகளுக்கும் தேவையான மைதானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், அதற்கான இடங்களை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மூலம் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது.
மாணவ-மாணவியர் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை ஊக்கப்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது முதல் கட்டமாக உடற்கல்வி ஆசிரியர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரை கொண்டு மைதானங்களுக்கான இடம் தேர்வு செய்யவும், அவர் களுக்கு ஆலோசனையும் வழங் கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட விளையாட்டு துறைஅலுவலர் கூறியதாவது:கிராமங்களில் இடவசதி இல்லை எனில் பள்ளிகளில் இடவசதி இருந்தால், அங்கு மைதானம்அமைக்கப்படும். மைதானம் தேர்வு செய்யப்பட்ட பின், அருகில்உள்ள உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு, மாணவர்கள், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் விளையாடுவதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.