தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல்: நவம்பர் 15, 16 தேதிகளில் அதிமுகவில் விருப்ப மனு; கட்டணத் தொகை அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புவோர் நவம்பர் 15, 16 ஆகிய இரு தேதிகளில் உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிமுக ஒருங்கிணப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட அனுமதி கோரும் கழக உடன்பிறப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

15.11.2019 (வெள்ளிக் கிழமை) மற்றும் 16.11.2019 (சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் தலைநகரங்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்'' என்று தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு பதவிக்கும் உரிய விருப்ப மனுவுக்கான கட்டணத் தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1. மாநகராட்சி மேயர் 25,000
2. மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் 5,000
3. நகர மன்றத் தலைவர் 10,000
4. நகர மன்ற வார்டு உறுப்பினர் 2,500
5. பேரூராட்சி மன்றத் தலைவர் 5,000
6. பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் 1,500
7. மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் 5,000
8. ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் 3,000

தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கான தேர்தல் குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT