சென்னை
மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமிக்க வேண்டும் என்று திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த செப்.6-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்கள் காரணமாக, பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், 3,000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டனர். திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, கனிமொழி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
இந்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமித்திடுக
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு 80 லட்சம் தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்து சோர்வடைந்திருக்கின்ற நிலையில், மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தவருக்கு அத்தனை வேலைவாய்ப்புகளையும் வாரி வழங்கிவரும் பச்சை துரோகத்திற்கு இந்த பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், இதர மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் 90 சதவீதத்திற்குக் குறையாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றும், மத்திய பாஜக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்:
* உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்திடுக.
* கீழடி அகழாய்வுப் பணியினை தொய்வின்றி மத்திய மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும்.
* மூழ்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கவனம் செலுத்திடுக!
* புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெறுக!
* நதிநீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்றிடுக, பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுத்திடுக!
* கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்பின் மீதான அய்யப்பாட்டை மத்திய அரசு தெளிவுபடுத்திட வேண்டும்.
* அழிவு சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கிடுக!