சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தில் மோப்ப நாயுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸார்.படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் தமிழகத்தில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதி நிலவியது: பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் நிம்மதி 

செய்திப்பிரிவு

சென்னை

அயோத்தி விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு நேற்று வெளியான நிலையில், எவ்வித அசம்பாவித சம்பவங்களுக்கும் இல்லாமல் தமிழகம் அமைதியாக திகழ்ந்தது. மக்கள் முழு அமைதியை கடைபிடித்தனர். இதனால் காவல் துறையினர் நிம்மதி அடைந்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குறிப்பாக வழிபாட்டு தலங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், முக்கிய அரசியல் கட்சி அலுவலகங்கள், பிரச்சினைக்குரிய இடங்கள் என்று முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த இடங்களில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். சந்தேகத்துக்குரிய நபர்கள் உடனடியாக பிடிக்கப்பட்டு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். தீர்ப்பை கேட்டு எதிர்வினை ஆற்றுவார்கள் என்று முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த சில தனி நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.

தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி திரிபாதி, ஏடிஜிபி ஜெயந்த்முரளி ஆகியோர் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். தமிழகம் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. விமான நிலையங்களில் பயணிகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ் சாலைகள், முக்கிய சாலைகளில் வாகன சோதனை நடைபெற்றது.

சென்னையில் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணிகள் அனைவரும் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே போலீஸ் எஸ்பி மகேஸ்வரன் நேற்று காலை நேரில் ஆய்வு செய்தார். சென்னையில் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் 3 கூடுதல் வாகனங்கள் கொடுக்கப்பட்டு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையர் தினகரன், இணை ஆணையர் சுதாகர் ஆகியோரும் ரோந்து சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கண்காணித்தனர்.

பிரச்சினைக்குரிய மத அமைப்புகளின் அலுவலகங்களில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால், அயோத்தி தீர்ப்பு வெளிவந்த பின்னரும் யாருமே அதை கொண்டாடவும் இல்லை. எதிர்த்து போராட்டம் நடத்தவும் இல்லை. பொதுமக்கள் தங்களது வழக்கமான பணிகளை தொடர்ந்தனர். கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல இயங்கின. வேலைக்குச் செல்பவர்கள், கடை களுக்குச் செல்பவர்கள், மாணவர் கள் என அனைத்து தரப்பு மக்களும் வழக்கம்போல இயங்கினர்.

பொதுமக்களின் இந்த இயல் பான நடவடிக்கையால் போலீ ஸார் மகிழ்ச்சியடைந்தனர். இது குறித்து போலீஸாரிடம் கேட்ட போது, “முன்பெல்லாம் இது போன்ற பாதுகாப்பு பணியில் நிற்கும்போது எப்போது போராட்டம் நடக்கும், வன்முறை சம்பவங்கள் நடைபெறும் என்று ஒருவித அச்சத்துடனேயே இருப் போம். ஆனால் இப்போது பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற் றம் வரவேற்கக் கூடியது. பொது மக்களின் வழக்கமான பணிகள் தொடர, போலீஸாரின் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளும் ஒரு காரணம். அரசியல்வாதிகள் மற்றும் மதவாத அமைப்பினர் அமைதி யாக இருந்தாலே வன்முறைகள் நடைபெறாது” என்றனர்.

அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தீர்ப்பு குறித்து பதட்டம் ஏற் படாத வகையில் தங்களது கருத்து களை தெரிவித்தனர். இதனால் தொண்டர்களும் அமைதியாகவே இருந்தனர். “உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் தமிழகத்தில் எந்தவிதமான வன்முறை சம்பவங்களும் நடைபெறவில்லை” என்று டிஜிபி ஜே.கே.திரிபாதியும் தெரிவித்து இருக்கிறார்.

SCROLL FOR NEXT