தமிழகம்

அயோத்தி தீர்ப்பு; அவரவர் நம்பிக்கையைப் போற்றியபடி ஒற்றுமையுடன் திகழ்ந்திடுவோம்: தினகரன் 

செய்திப்பிரிவு

சென்னை

அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவரவர் நம்பிக்கையைப் போற்றியபடி, தொடர்ந்து ஒற்றுமையுடன் திகழ்ந்திடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி நில விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும். அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''அயோத்தி வழக்கில் நாட்டின் உயரிய சட்ட அமைப்பான உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை, தீர்ப்பாக மட்டுமே கருதி அனைத்துத் தரப்பினரும் அணுகிட வேண்டும். இந்த நேரத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இந்தியர் என்ற உணர்வோடு, அடுத்தவருக்குப் பாதிப்பில்லாமல் அவரவர் நம்பிக்கையைப் போற்றியபடி, தொடர்ந்து ஒற்றுமையுடன் திகழ்ந்திடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT