திருச்சி
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில், தண்டனைக் காலம் முடிவுற்ற தங்களை உடனே விடுதலை செய்யக்கோரி வெளிநாட்டுக் கைதிகள் 15 பேர் தற்கொலைக்கு முயன்றனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, வங்கதேசம், பல்கேரியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 72 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனைக் காலத்தை தாண்டி ஆண்டுக்கணக்கில் சட்டவிரோதமாக தங்களை அடைத்துவைத்திருப்பதாகக் கூறியும், பிணை கிடைத்தாலும் வெளியேவிட மறுப்பதாகக் கூறியும் இவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். இவ்வாறு நேற்று முன்தினம் 70 பேர் உண்ணாவிரதம் இருந்த நிலையில், வங்கதேசத்தினர் 7 பேர் விரைவில் விடுதலையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, இலங்கையைச் சேர்ந்த 38 பேர், வங்கதேசத்தினர் 23 பேர் உட்பட 65 பேரும் நேற்று உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர்.
அப்போது, இலங்கையைச் சேர்ந்த 16 பேர், வங்கதேசத்தினர் 4 பேர் என 20 பேர் நேற்று சிறப்பு முகாமில் இருந்த எறும்பு மருந்துமற்றும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றனராம். இதில், மயக்கமடைந்த 15 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து, அகதிகளுக்கான தனி துணை ஆட்சியர் சுதந்திரராஜன், சிறப்பு முகாமுக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.